நாட்டில் நீதி கிடைக்கவில்லை என கூறி பெல்ட்டால் அடித்துகொண்ட ஆம்ஆத்மி தலைவர்; வீடியோ வைரல்
நாட்டில் நீதி கிடைக்கவில்லை என கூறி பெல்ட்டால் அடித்துகொண்ட ஆம்ஆத்மி தலைவர்; வீடியோ வைரல்
ADDED : ஜன 07, 2025 09:07 AM

ஆமதாபாத்: குஜராத்தில் ஆம்ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா, 'நாட்டில் பல்வேறு வழக்குகளில் நீதி கிடைக்கவில்லை' என தன்னைத்தானே பெல்ட்டால் அடித்துக்கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத்தின் சூரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா பா.ஜ., ஆளும் மாநிலத்தில் நடந்த பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி, தன்னைத்தானே பெல்ட்டால் அடித்துக்கொண்டார். அருகில் இருந்த சக தலைவர்கள் ஓடி வந்து அவரிடம் இருந்து பெல்ட்டை பிடுங்கி கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் 6 முறை தன்னைத்தானே அடித்துக்கொண்டார்.
பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது: பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசியல் போராட்டங்களை நடத்தி வருகிறோம். பா.ஜ., ஆட்சியின் கீழ், அதிகாரிகள் மற்றும் பா.ஜ., தலைவர்களின் ஊழல் வழக்கில் உண்மைகள் மறைக்கப்படுகிறது. மக்களுக்கு நீதி கிடைப்பது கடினமாகி உள்ளது. மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்தது, வதோதரா படகு கவிழ்ந்த சம்பவம், அரசு ஆட்சேர்ப்பு தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற பல சம்பவங்களை குஜராத் கண்டுள்ளது.
நானும் எனது கட்சியும், சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலமுறை போராடியுள்ளோம். இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, மாவட்ட நீதிபதிகள், எஸ்.பி., மற்றும் பிற அதிகாரிகளை சந்தித்தோம். நீதிமன்றத்திற்குச் சென்றாலும், குஜராத் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஒவ்வொரு சம்பவத்துக்குப் பிறகும் பா.ஜ.,தலைவர்கள் அறிக்கைகளை வெளியீட்டு பொதுமக்களை கேலி செய்கிறார்கள். போலீசார் சரியான பதிலை அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

