ADDED : டிச 07, 2024 11:02 PM

கலபுரகி: கலபுரகி மத்திய சிறையில் கைதிகள் மது அருந்தும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது. தனக்கு எதிராக சதி நடப்பதாக, சிறைக் கண்காணிப்பாளர் அனிதா புலம்பி உள்ளார்.
கலபுரகி மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில், தண்டனை பெற்ற கைதிகள், விசாரணை கைதிகள் என 629 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறை ஊழியர்கள் உதவியுடன், கைதிகளுக்கு கஞ்சா கிடைப்பதாக, ஆறு மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சிறையில் போலீசார் சோதனை நடத்தி கஞ்சா, மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, சிறைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற அனிதா, சிறைக்குள் கஞ்சா வருவதை தடுக்க நடவடிக்கை எடுத்தார். “கைதிகளுக்கு உதவி செய்தால், உங்கள் மீது நடவடிக்கை பாயும்,” என, சிறை ஊழியர்களை எச்சரித்தார்.
இதனால் கடுப்பான கைதிகள், சிறையில் அளிக்கப்படும் உணவு சரியாக இல்லை என, கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். அனிதா மீது குற்றச்சாட்டு கூறினர்.
போராட்டம் நடந்த இரண்டு நாட்களில், அனிதாவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக, சிறைக்குள் இருந்தபடியே கைதிகள் மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக இரண்டு பெண் கைதிகள் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவானது.
இந்நிலையில் சிறையில் உள்ள அறையில் அமர்ந்தபடி, கைதிகள் மது குடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சிறைக்குள் மீண்டும் சட்டவிரோத சம்பவம் நடப்பதாக பேச்சு எழுந்தது.
இதை சிறைக் கண்காணிப்பாளர் அனிதா மறுத்துள்ளார். “சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோ, எடிட் செய்யப்பட்டது. எனக்கு எதிராக சதி நடக்கிறது. சதியை திறம்பட எதிர்கொள்வேன்,” என, அவர் கூறினார்.