ADDED : ஏப் 10, 2025 08:37 PM
கர்கர்டூமா: ஓடும் மெட்ரோ ரயிலில் மது அருந்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஓடும் ரயிலில் ஒரு வாலிபர் மது அருந்தி முட்டை சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வாலிபரின் செயலுக்கு பலத்த கண்டனம் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.
இந்த சம்பவம், மெட்ரோ ரயிலின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து எழுந்தது.
இதையடுத்து மெட்ரோ போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிங்க் வழித்தடத்தில் மவுஜ்பூர் நோக்கிச் சென்ற மெட்ரோ ரயிலில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக ஷாஹ்தராவில் வசிக்கும் ஆகாஷ் குமார் என்ற 25 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் பயனர்களின் கவனத்தை ஈர்க்க, மார்ச் 23ம் தேதி இரவு 10:00 மணி அளவில் மெட்ரோ ரயிலில் வெல்கமில் இருந்து கர்கர்டூமா கோர்ட் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அவர் பயணம் செய்தபோது வீடியோ எடுத்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

