ஒழுங்கு நடவடிக்கையை தாமதமின்றி முடிக்க விஜிலன்ஸ் கமிஷன் உத்தரவு
ஒழுங்கு நடவடிக்கையை தாமதமின்றி முடிக்க விஜிலன்ஸ் கமிஷன் உத்தரவு
ADDED : பிப் 26, 2024 11:56 PM

புதுடில்லி: ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான வழக்குகளை, கால தாமதமின்றி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவுக்கு கொண்டு வருவதை உறுதி செய்யும்படி, அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களை மத்திய விஜிலன்ஸ் கமிஷன் எனப்படும், ஊழல் தடுப்பு ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
வழிகாட்டுதல்
இது தொடர்பாக, அனைத்து மத்திய அரசுத்துறை செயலர்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு மத்திய விஜிலென்ஸ் கமிஷன் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
மத்திய அரசு பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விசாரணையை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசுப் பணியாளர்கள் நலன் மற்றும் பயிற்சித்துறை அவ்வப்போது வழிகாட்டுதல்களை வெளியிட்டு வந்துள்ளது.
பல சந்தர்ப்பங்களில், வழக்குகளை தர்க்கரீதியாக முடிவுக்குக் கொண்டு வருவதில் மிதமிஞ்சிய தாமதம் ஏற்படுவதை அறிந்து கொள்ள முடிந்தது. இது நீதியின் கொள்கைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, எதற்காக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோ, அந்த நோக்கத்தையே அர்த்தமற்றதாக்கி விடுகிறது.
இறுதி உத்தரவுகள் வெளியிடப்படும் வரை விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை முடிப்பதற்கான மாதிரி காலக்கெடுவை கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
பயிற்சி
விஜிலன்ஸ் கமிஷன் மற்றும் மத்திய அரசு பணியாளர்கள் நலத்துறை தற்போது வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை, ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற அதிகாரிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
அந்தந்த நிறுவனங்களின் தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் இந்த வழிகாட்டுதல்களை தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரலாம்.
நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு வரப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
ஒழுங்கு நடவடிக்கைகளை சரியான நேரத்தில் சுமுகமாக முடிப்பதை உறுதி செய்வதற்காக, விசாரணை அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
துறை ரீதியிலான விசாரணைகளை சரியான நேரத்திலும், சிறப்பாகவும் செய்து முடிக்கும் அதிகாரிகளுக்கு அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

