கிரிக்கெட்டில் அசத்தும் விஜயபுரா மாற்றுத்திறனாளி வீரர்கள்
கிரிக்கெட்டில் அசத்தும் விஜயபுரா மாற்றுத்திறனாளி வீரர்கள்
UPDATED : நவ 05, 2023 12:29 PM
ADDED : நவ 05, 2023 08:38 AM

மாநில, தேசிய அளவில் சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் விஜயபுரா மாவட்டத்தின் மாற்றுத்திறனாளி வீரர்கள் அசத்தி வருகின்றனர்.
விஜயபுரா மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக, 2008ல் கர்நாடகா மாநில திவ்யாங் கிரிக்கெட் சங்கம் துவங்கப்பட்டது. 2020ல் இருசக்கர நாற்காலி வீரர்களுக்கான பிரிவு துவங்கப்பட்டது. இந்த பிரிவில், தற்போது மாநிலம் முழுதும் 120 வீரர்கள் விளையாடி வருகின்றனர். மாநில, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
போலியோ பாதிப்பு
இதுதொடர்பாக, சக்கர நாற்காலி கிரிக்கெட் வீரர்கள் அணி தலைவர் மகேஷ் தோடாத் கூறியதாவது:விஜயபுரா மாவட்டம், சிந்தகியின் கெருடகி கிராமத்தைச் சேர்ந்தவன். சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டேன். சிறு வயதில் எனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவேன். எனக்காக, 'ரன்னர்' வைத்து விளையாடினேன்.
கிரிக்கெட் மீதான ஆர்வத்தால், 2016ல் தொழில்முறை வீரராக தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றேன். 2020ல் சக்கர நாற்காலி கிரிக்கெட் விளையாட்டில் இணைந்தேன். வீட்டை வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் எனக்கான தேவையை பூர்த்தி செய்து கொள்கிறேன்.
வீரர்களுக்கு பயிற்சி
அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பின், என்னை போன்று சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். விஜயபுரா மாவட்டத்தில் 25 வீரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு இடத்தில் இருந்தாலும், கிரிக்கெட் மீதான ஆர்வம், இங்கு ஒன்றிணைத்துள்ளது. போலியோ அல்லது விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், மாவட்ட மைதானத்தில் குறைந்தபட்சம் ஐந்து மணி நேரம் பயிற்சி மேற்கொள்வோம்.
கர்நாடகா, தமிழகம், புதுடில்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளேன். அத்துடன் புதுடில்லியில் நடந்த ஐ.டபிள்யூ.பி.எல்., எனும் இந்தியன் சக்கர நாற்காலி பிரிமியர் லீக் விளையாடி உள்ளேன்.இந்திய பிரிமியர் லீக்கில் தேர்வாகும் வீரர்கள், அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவர். ஆனால், ஐ.டபிள்யூ.பி.எல்., விளையாடும் வீரர்களுக்கு பணம் கிடைப்பதில்லை. இவர்களுக்கு உணவும், தங்கும் இடமும் விளையாட்டு நடத்துபவர்களே ஏற்பாடு செய்கின்றனர். பயண செலவையும் வீரர்களே ஏற்க வேண்டிய நிலை உள்ளது.
சலுகைகள் இல்லை
கிரிக்கெட் மீதான எங்களின் ஆர்வத்துக்கு, அரசோ அல்லது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ ஊக்குவிக்கவில்லை. இதனால் எங்களுக்கு எந்த நிதி உதவியோ அல்லது பிற சலுகைகளோ கிடைப்பதில்லை.நாங்கள் கிரிக்கெட் விளையாடுவது, எங்கள் ஆர்வத்தால் மட்டுமே. ஒரு நபர் தனது சொந்த பணத்தை செலவழித்தோ அல்லது ஸ்பான்சர்களின் உதவியை நாடி எத்தனை நாள் விளையாட்டை தொடர முடியும்?
சர்வதேச நாடுகளில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் தொழில்முறை சக்கர நாற்காலியை வாங்குவதற்கு, வீரர்களுக்கு தேவையான நிதி இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் வழக்கமான சக்கர நாற்காலிகளை தான் பயன்படுத்துகிறோம். அவை மெதுவாக செல்லத் தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலி என்பதால், வேகமாக திரும்புவது கடினம்.
தொழில்ரீதியாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலிகள், சிறந்த சுழற்சிக்காக தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றின் விலை அதிகம். அவ்வளவு தொகை கொடுத்து வாங்க முடியாது என்பதால், விளையாட்டுத் துறை எங்களுக்கு கிரிக்கெட் கிட்களை வழங்க வேண்டும்.இதற்கான சிறப்பு திட்டமோ, மானியங்களோ இல்லாததால், நாங்கள் ஆதரவற்று நிற்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

