ADDED : டிச 06, 2024 06:54 AM

விஜயபுரா: விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண், வர்த்தக விமானம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
பெரும்பாலானோருக்கு 50 வயது கடந்த பின்னரும் கூட, சைக்கிள், இருசக்கர வாகனங்கள் கூட ஓட்டத் தெரியாது.
ஆனால், விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்த சமைரா ஹுல்லுார், தனது 18 வது வயதில், வர்த்தக விமானம் ஓட்டுவதற்கான உரிமத்தை பெற்றுள்ளார். இதன் மூலம் நாட்டிலேயே இளம் வயதில் விமான ஓட்டுனர் உரிமம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
விஜயபுரா உற்சவம் நடந்த போது, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகம் செய்தது. இதில், தனது குடும்பத்தினருடன் சமைரா பயணித்தார்.
அப்போது பைலட் அருகில் அமர்ந்திருந்த சமைரா, தனக்குள் எழுந்த சந்தேகங்களை, பைலட்டிடம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தார். பைலட்டும், மகளின் கேள்விக்கு பதிலளித்து கொண்டே இருந்தார்.
அன்றே, தான் பைலட் ஆக வேண்டும் என்று சமைரா முடிவு செய்து விட்டார். இது தொடர்பாக தனது தந்தை ஹூல்லுாரிடம் தெரிவித்தார். அவரும் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, புதுடில்லியில் உள்ள, 'வினோத் யாதவ் ஏவியேஷன் அகாடமி' மற்றும் மஹாராஷ்டிராவின் பராமதியில் உள்ள 'கார்வார் ஏவியேஷன் அகாடமி'யில் பயிற்சி பெற்றார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் சார்பில் நடத்தப்பட்ட ஆறு தேர்வுகளிலும், முதல் முறையில் தேர்ச்சி பெற்றார்.
அத்துடன், பகல், இரவு நேரங்களில் பல இன்ஜின்கள் கொண்ட விமானங்கள் உட்பட பல விமானங்களை 200 மணி நேரம் ஓட்டியுள்ளார்.
அவருக்கு பயிற்சி அளித்த கேப்டன் தமேஷ் யாதவ், வினோத் யாதவ் ஆகியோரும், சமைராவை பாராட்டினர்.
6_DMR_0005, 6_DMR_0006
வர்த்தக விமானம் ஒட்டுவதற்கான தகுதி பெற்ற சமைரா ஹுல்லுாருக்கு பேட்ஜ் அணிவித்த அதிகாரிகள். (அடுத்த படம்) பெற்றோர், சகோதரருடன் சமைரா.