பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகரை கோபப்படுத்திய விஜயேந்திரா
பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகரை கோபப்படுத்திய விஜயேந்திரா
ADDED : பிப் 03, 2024 11:05 PM

பெங்களூரு: தனக்கு எதிராக செயல்பட்டதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை, விஜயேந்திரா மீண்டும் கட்சியில் சேர்த்து இருப்பது, பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகரை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
பெங்களூரு யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர். இவர் முன்பு காங்கிரசில் இருந்தார். 2019ல் பா.ஜ.,வுக்கு தாவினார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், பா.ஜ.,வில் சிலர் தன்னை தோற்கடிக்க சதி செய்தனர் என, பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். தாய் கட்சியான காங்கிரசுக்கு தாவவும் தயாரானார்.
அப்போதைய பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல், சோமசேகரை சமாதானம் செய்தார். சோமசேகருக்கு எதிராக செயல்பட்ட, பா.ஜ., பிரமுகர் ஒருவரை, கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கி, நளின்குமார் கட்டீல் உத்தரவிட்டு இருந்தார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை, தற்போதைய பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளார். இது சோமசேகருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் மைசூரு லோக்சபா தொகுதி வேட்பாளராக சோமசேகரை நிறுத்த, காங்கிரஸ் திட்டம் வைத்துள்ளது.
பா.ஜ., ஆட்சியில் கூட்டுறவு அமைச்சராக இருந்த சோமசேகர், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருந்தார். மைசூரு காங்கிரஸ் தலைவர்களுடன், சோமசேகருக்கு நட்புறவு உள்ளது. இதனால் அவரை அங்கு நிற்க வைத்து, வெற்றி பெற வைக்கலாம் என்பது, காங்கிரஸ் கணக்காக உள்ளது.