ADDED : டிச 17, 2024 10:13 PM

பல்லாரி; “பதவிக் காலம் முடியும் வரை தலைவர் பதவியில் விஜயேந்திரா நீடிப்பார்,” என, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு கணித்துள்ளார்.
பல்லாரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து விஜயேந்திரா அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படுவார் என, முன்னாள் அமைச்சர் குமார் பங்காரப்பா கூறியுள்ளார். விஜயேந்திராவை தலைவராக நியமித்தது கட்சி மேலிடம். இதனால் பதவிக் காலம் முடியும் வரை அவர்தான் தலைவராக நீடிப்பார். பதவிக் காலத்தின்போது ஒருவரை நீக்கிவிட்டு, இன்னொருவருக்கு வாய்ப்பு கொடுக்கும் பழக்கம் பா.ஜ.,வில் இல்லை.
இப்போது விஜயேந்திரா, எத்னால் என்று இரு அணிகள் இருக்கலாம். ஆனால் இரு அணிகளின் நோக்கமும் கட்சியை வலுப்படுத்துவது தான். எத்னால் மூத்த தலைவர். மத்திய அமைச்சராக இருந்த அனுபவம் உடையவர். விஜயேந்திரா வயதில் இளையவர். ஆனாலும் கட்சியை கட்டமைக்கும் திறமை அவரிடம் உள்ளது.
இரு அணிகளாக பிரிந்து நமக்குள் சண்டையிட்டுக் கொண்டால், காங்கிரசுக்கு தான் லாபம். இதனால் கருத்து வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
பா.ஜ.,வில் எனக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. இதனால் நான் கட்சியை விட்டு விலகும் பேச்சுக்கு இடமில்லை. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்.
பஞ்சமசாலி சமூகத்தினர் மீது அரசு தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. அந்த சமூகத்திலும் ஏழை மக்கள் உள்ளனர். இட ஒதுக்கீடு கொடுத்தால் அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேறும். இட ஒதுக்கீடு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.