பொறுப்பற்ற காங்., அரசால் பெண்கள் பலி பல்லாரி சம்பவத்தில் விஜயேந்திரா பாய்ச்சல்
பொறுப்பற்ற காங்., அரசால் பெண்கள் பலி பல்லாரி சம்பவத்தில் விஜயேந்திரா பாய்ச்சல்
ADDED : டிச 10, 2024 07:22 AM

பெலகாவி: ''காங்கிரஸ் அரசின் பொறுப்பின்மையே, பல்லாரி அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண்கள் இறப்புக்கு காரணம்,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
பல்லாரி அரசு மருத்துவமனையில், குழந்தை பிரசவித்த பெண்கள் இறப்பு தொடர்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் பெலகாவியில் நடக்கிறதா என்று மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா, மேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி உட்பட பலர் நேற்று விசாரிக்க சென்றனர்.
பெண்கள் இறப்பு குறித்து டாக்டர்கள், நோயாளிகளிடம் விபரம் கேட்டறிந்தனர்.
பின், விஜயேந்திரா அளித்த பேட்டி:
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கனவே பேசிவிட்டனர். பல்லாரியில் ஆறு தாய்மார்களும், குழந்தைகளும் இறந்துள்ளனர். இதற்கு, மாநில அரசின் பொறுப்பின்மையே காரணம். உண்மையை கண்டறியவே இங்கு வந்துள்ளோம். இவ்விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
ஏழைகளுக்கு அநீதி ஏற்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் கர்ப்பிணியர், உயிரிழப்பு உட்பட பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். இது தொடர்பாக சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம்.
சுகாதார துறை அமைச்சர், மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு இது பற்றி கவலையே இல்லை. மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல், அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு கூட செல்வதில்லை. பொறுப்பின்றி இருக்கும் மாநில அரசு, இதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சலவாதி நாராயணசாமி கூறுகையில், ''மாநில அளவில் கர்ப்பிணியர், குழந்தைகள் இறப்பை பார்க்கும் போது குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனைகள், கல்லறையாக மாறி வருகின்றன. இதற்கு மாநில காங்கிரஸ் அரசே நேரடி காரணம். அரசு மருத்துவமனைகளில், அரசு கவனம் செலுத்தவில்லை. தரமற்ற மருந்துகளால் தான், இச்சம்பவங்கள் நடந்துள்ளன,'' என்றார்.