விஜயேந்திரா, நிகில் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி
விஜயேந்திரா, நிகில் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி
ADDED : நவ 24, 2024 05:37 AM

பெங்களூரு: இடைத்தேர்தலில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டதால், மாநில தலைவர் விஜயேந்திராவின் பதவி நிலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே போன்று, ம.ஜ.த.,வின் எதிர்கால தலைவராக நம்பப்பட்ட நிகில் குமாரசாமியின் அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ என, தொண்டர்கள் அஞ்சுகின்றனர்.
ஷிகாவி, சண்டூர், சென்னப்பட்டணா சட்டசபை தொகுதிகளுக்கு, இம்மாதம் 13ம் தேதி நடந்த இடைத்தேர்தல் முடிவு, நேற்று வெளியானது. ஒரு தொகுதியிலும் கூட, தேசிய ஜனநாயக கூட்டணி பா.ஜ., வெற்றி பெறவில்லை.
இந்த இடைத்தேர்தல், மாநில தலைவர் விஜயேந்திராவுக்கு அக்னி பரிட்சையாக இருந்தது. இதில் வெற்றி பெறுவதன் மூலம், சொந்த கட்சியில் உள்ள தன் எதிரிகளுக்கு பாடம் புகட்ட விரும்பினார். ஆனால் அவரது ஆசை நிராசையானது.
பொன்னான வாய்ப்பு
பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டதால், காங்கிரசை விட பா.ஜ.,வில் தலைவர்கள் உள்ளுக்குள் மகிழ்கின்றனர். இதை அவர்கள் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியாக கருதவில்லை. விஜயேந்திராவை பதவியில் இருந்து கீழே இறக்க, தங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாக கருதுகின்றனர்.
விஜயேந்திரா மாநில தலைவராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, ரமேஷ் ஜார்கிஹோளி, பசனகவுடா பாட்டீல் எத்னால் உட்பட, பல தலைவர்கள் வெறுப்பை உமிழ்கின்றனர்.
எடியூரப்பாவின் மகன் என்ற ஒரே தகுதியை வைத்து, அவரை மாநில தலைவராக்கியது சரியல்ல என, அதிருப்தி தெரிவிக்கின்றனர். கட்சி பணிகளிலும் ஈடுபாடு காட்டுவது இல்லை.
குறிப்பாக ரமேஷ் ஜார்கிஹோளி, பசனகவுடா எத்னால் பகிரங்கமாகவே விஜயேந்திராவை கடுமையாக விமர்சிக்கின்றனர். இவரை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கும் வரை, ஓயமாட்டோம் என, சவால் விடுத்துள்ளனர். இப்போது இடைத்தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு, அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
கட்சி வெற்றி பெற்றிருந்தால், விஜயேந்திராவின் தலைமைக்கு, மக்களின் ஆதரவு உள்ளது. எடியூரப்பாவின் செல்வாக்கு குறையவில்லை என்பதை காண்பிக்க, அவரது ஆதரவு கோஷ்டியினர் காத்திருந்தனர். இப்போது தோற்றதால், மாநில தலைவரை மாற்றும்படி, விஜயேந்திராவின் எதிரி கோஷ்டியினர் மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்க கூடும்.
லிங்காயத் செல்வாக்கு
ஷிகாவி, சண்டூரில் லிங்காயத்தினருக்கு செல்வாக்கு உள்ளது. இவர்களின் ஓட்டுகளை ஈர்ப்பதில், இவர் தோற்றுவிட்டார். இதனால் பசனகவுடா பாட்டீல் எத்னால், குமார் பங்காரப்பா, முன்னாள் எம்.பி.,க்கள் சித்தேஸ்வர், அன்னா சாஹேப் ஜொல்லே, ரமேஷ் ஜார்கிஹோளி சுறுசுறுப்படைந்துள்ளனர். விஜயேந்திராவை பதவியில் இருந்து நீக்கி, பா.ஜ.,வை காப்பாற்றும்படி நெருக்கடி கொடுத்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
ஏற்கனவே இவர்கள், டிசம்பரில் விஜயேந்திரா, மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என, கூறி வந்தனர்.
நிகிலின் திகில்
இதே போன்று, நிகில் குமாரசாமியின் அரசியல் எதிர்காலமும், அந்தரத்தில் தொங்குகிறது. இது அவரது மூன்றாவது தோல்வியாகும். 2019ன் லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் ம.ஜ.த., சார்பில் நிகில் போட்டியிட்டார். சுமலதா அம்பரிஷிடம் தோற்றார். கடந்த 2023ன் சட்டசபை தேர்தலில், ராம்நகர் தொகுதியில் போட்டியிட்டார். தாத்தா தேவகவுடா, தந்தை குமாரசாமிக்கு அரசியல் மறுவாழ்வு அளித்த ராம்நகர், நிகிலை கை விட்டு விட்டது.
இப்போது மூன்றாவது முறையாக சென்னப்பட்டணாவில் தோல்வியை சந்தித்துள்ளார். இது அரசியல் எதிர்காலத்துக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. ம.ஜ.த.,வின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நிகில்.
பிரஜ்வல்
இதற்கு முன் ம.ஜ.த.,வில், எம்.பி.,யாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, வளரும் தலைவராக இருந்தார். பாலியல் பலாத்கார வழக்கில் அவர் கைதாகி, சிறையில் இருக்கிறார். அவர் கைதான பின், கட்சியின் இமேஜ் பாதிக்கப்பட்டது. பிரஜ்வல் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
எனவே நிகில் குமாரசாமியை, ம.ஜ.த.,வின் எதிர்கால தலைவராக மேலிடமும், தொண்டர்களும் கருதினர். ஆனால் அவர் அடுத்தடுத்து தோல்வி அடைவதால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.