சித்தராமையா பதவி பறிக்கப்படும் அடித்து சொல்கிறார் விஜயேந்திரா
சித்தராமையா பதவி பறிக்கப்படும் அடித்து சொல்கிறார் விஜயேந்திரா
ADDED : ஜன 17, 2025 11:10 PM

மைசூரு: ''எனக்கு கிடைத்த தகவலின்படி, இம்முறை சித்தராமையா ஆட்சி காலம் முழுதும், முதல்வராக நீடிக்க காங்., மேலிடம் அனுமதிக்காது. எந்த நேரத்திலும் அவரிடம் ராஜினாமா பெற வாய்ப்புள்ளது,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., மேலிடம் என் மீது நம்பிக்கை வைத்து, மாநில தலைவராக நியமித்தது. நான் அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து செல்கிறேன்.
தற்போதைக்கு நானே மாநில தலைவராக நீடிப்பேன். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். மற்ற விஷயங்களை பற்றி, பதிலளிக்க நான் விரும்பவில்லை.
என்னை பற்றி விமர்சிக்கும் பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு, கடவுள் நல்லது செய்யட்டும். கட்சி மேலிடத்தின் உத்தரவுப்படி, மாநில தலைவர் பதவியில் நீடிப்பேன்.
சித்தாமையாவை முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்க, துணை முதல்வர் சிவகுமார், கடப்பாரை, மண் வெட்டியை கையில் எடுத்து கொண்டு வீதிக்கு வந்துள்ளார். எந்த நேரத்திலும் சித்தராமையா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும்.
மாநில காங்கிரசில் முதல்வர் மாற்றம் விஷயம், பரபரப்பை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையே தலைவர்களின் டின்னர் மீட்டிங் பாலிடிக்ஸ் கூட, ஜோராக நடக்கிறது. இதற்கு பிரேக் போட, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் முயற்சிக்கிறார். இவருக்கு எதிராகவே, அமைச்சர்கள் பேசுகின்றனர். சித்தராமையா அரசியல் சாணக்கியர். இவர் சிவகுமாருக்கு எதிராக காய் நகர்த்துகிறார். ஒப்பந்தப்படி பதவி காலம் முடிந்ததும், பதவியை விட்டுத் தராமல் இருக்க தந்திரம் செய்கிறார்.
தன் ஆதரவாளர்கள் மூலம், காய் நகர்த்துகிறார். இது எங்கு போய் நிற்குமோ தெரியவில்லை.மாநிலத்தில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்த, சித்தராமையா மட்டுமல்ல, தன்னுடைய பங்கும் அதிகம் என, சிவகுமார் கூறியுள்ளார். அடுத்த முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என, சிவகுமாருக்கு தெரியும். எனவே இம்முறையே முதல்வராக, என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்கிறார். சிவகுமார் முதல்வராவதை தடுக்க, அமைச்சர்களின் வீட்டில் டின்னர் மீட்டிங் நடத்துகின்றனர்.
எனக்கு கிடைத்த தகவலின்படி, இம்முறை சித்தராமையா ஆட்சி காலம் முழுதும், முதல்வராக நீடிக்க காங்., மேலிடம் அனுமதிக்காது. எந்த நேரத்திலும் அவரிடம் ராஜினாமா பெற வாய்ப்புள்ளது.
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. இந்த அரசுக்கு மக்களின் முன்னேற்றம் பற்றிய சிந்தனை இல்லை. விவசாயிகள் அரசை சபிக்கின்றனர்.
தேச துரோகிகளை அடக்க, அரசு முயற்சிக்கவில்லை. யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. எந்த விஷயத்தையும் அரசு தீவிரமாக கருதவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.