ADDED : பிப் 20, 2024 06:37 AM

பெங்களூரு: கர்நாடக மாநில பா.ஜ., தலைவராக விஜயேந்திரா பதவியேற்று, 100 நாட்கள் நிறைவு பெற்றது. லோக்சபா தேர்தலில் அதிகபட்ச தொகுதிகளில் வெற்றி பெற்று, தன் திறமையை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் இளைய மகனும், ஷிகாரிபுரா எம்.எல்.ஏ.,வுமான விஜயேந்திரா, 2023 நவம்பர் 10ம் தேதி, மாநில பா.ஜ., தலைவராக பொறுப்பேற்றார்.
உட்கட்சி பூசல்
அவர் பதவியேற்று, இம்மாதம் 18ம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவு பெற்றது. ஆரம்பம் முதலே கட்சியின் மூத்த தலைவர்களால் உட்கட்சி பூசலை எதிர்கொண்டு வருகிறார். இன்றளவும் பலருக்கு, அவரது நியமனம் பிடிக்கவில்லை.
மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி, சோமசேகர், சிவராம் ஹெப்பார், முன்னாள் எம்.எல்.ஏ., சோமண்ணா போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலிட முடிவாலும், எடியூரப்பாவின் மகன் என்பதாலும் சிலர் மவுனத்துடன் உள்ளனர். பலர் எதிர்ப்புக்கிடையிலும், கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
தந்தை வழியில்
அவரது தந்தை போலவே, எந்த மாவட்டத்துக்கு சென்றாலும், ஒரு பூத் மட்ட தலைவரின் வீட்டுக்கு சென்று உற்சாகப்படுத்துகிறார். 100 நாட்களில், மாநிலத்தின் 31 மாவட்டங்களில், 29 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
இளைஞர்களை அடையாளம் கண்டு, மாநில, மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்தார். இவரது பணியை அறிந்து, பிரதமர் நரேந்திர மோடி உட்பட மேலிட தலைவர்களே பாராட்டியுள்ளனர்.
இதற்கிடையில், லோக்சபா தேர்தலில் 20க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு, விஜயேந்திராவுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கட்சியை பலப்படுத்துவதில் தீவிரம் காண்பித்து வருகிறார்.
மேலிடத்தின் கட்டளையை அப்படியே கடைபிடித்து வருகிறார். கர்நாடகாவின் எந்த முடிவாக இருந்தாலும், இவரது ஆலோசனை பெற்றே புதுடில்லி தலைவர்கள் செய்கின்றனர்.
இந்த நம்பிக்கையை தக்க வைத்து கொள்வதற்காக, மேலிட உத்தரவுப்படி, லோக்சபா தேர்தலில் அதிகபட்ச தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு உழைத்து வருகிறார். இதன் மூலம் தன் விரோதிகளின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க, திட்டமிட்டுள்ளார்.

