காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக கிராமத்தினர் கோஷம்
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக கிராமத்தினர் கோஷம்
ADDED : அக் 15, 2024 12:22 AM

ஹாசன்: நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக நடந்த இசை கச்சேரியில், அரசிகெரே காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக, கிராம மக்கள் கோஷம் எழுப்பியதால், பாதியிலேயே வெளியேறினார்.
நவராத்திரி நிறைவு நாளை ஒட்டி, ஹாசன் மாவட்டம், அரிசிகெரேயின் கெங்கரே கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டது.
கச்சேரியை, தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா துவக்கி வைத்தார். அவர் பேசும் போது, குறுக்கிட்ட கிராம மக்கள், 'ஹேமாவதி ஆற்றில் இருந்து கிராமத்தில் உள்ள ஏரியை நிரப்பும் திட்டத்தை ஏன் நிறுத்தினீர்கள்' என கேள்வி எழுப்பினர்.
இதனால், எம்.எல்.ஏ.,வுக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர், 'கள்ளன்.. கள்ளன்' என கோஷம் எழுப்பினர்.
எம்.எல்.ஏ., ஆதரவாளர்களுக்கும், கிராமத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனில்லை. வேறு வழியின்றி, எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா, பாதியிலேயே மேடையில் இருந்து இறங்கி புறப்பட்டு சென்றுவிட்டார்.
கடந்த ஆட்சியில் ம.ஜ.த.,வில் இருந்த சிவலிங்கே கவுடா, அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து எம்.எல்.ஏ., ஆனவர்.