காட்டு யானைகள் தாக்கி கிராம மக்கள் பலி; கர்நாடகாவில் வனத்துறை அலுவலகம் முற்றுகை
காட்டு யானைகள் தாக்கி கிராம மக்கள் பலி; கர்நாடகாவில் வனத்துறை அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூலை 29, 2025 03:15 AM

சிக்கமகளூரு: கர்நாடகாவின் சிக்கமகளூரு பகுதியில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், நேற்று அப்பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
வனத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு, பாலேஹொன்னுார் அருகில் உள்ள காபி தோட்டத்தில் அனிதா, 25, என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த 24ம் தேதி, யானை தாக்கியதில் அனிதா உயிரிழந்தார்.
அந்தவானே ஜகாரா கிராமத்தைச் சேர்ந்த சப்ராய கவுடா, 64, என்ற விவசாயியும் யானை மிதித்ததில் உயிரிழந்தார்.
வனத்துறை அதிகாரிகள் யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.
வனத்துறையை கண்டித்து, நேற்று பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.
இதன்படி, பாலேஹொன்னுாரில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
பாலேஹொன்னுாரில் உள்ள வனத்துறை அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, வீடியோ கான்பரன்சில் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அவர் பேசுகையில், ''இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும். அதிகாரிகள் உடனடியாக, யானைகளை காட்டுக்குள் விரட்ட வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, 'கும்கி யானையை பயன்படுத்தி, காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு, வனத்துக்குள் விடப்படும்' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.