ADDED : டிச 20, 2024 10:58 PM
பேத்தமங்களா: அய்யப்பள்ளி கிராமத்தில் மயானத்திற்கு இடம் தேர்வு செய்யவில்லையெனில், தாலுகா அலுவலகம் முன் பிணத்துடன் போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
பேத்தமங்களா அருகே உள்ள டி.கொள்ளஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அய்யப்பள்ளி கிராமத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானத்துக்கு இடம் அளிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.
கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா உத்தரவின்படி, அய்யப்பள்ளி கிராமத்திற்கு வருவாய்த் துறை, சர்வே துறை அதிகாரிகள் மயானத்துக்கு இடம் தேர்வு செய்ய வந்தனர்.
ஆனால், மயானத்துக்கு இடத்தை அடையாளம் காண இன்னும் சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இன்னும் 15 நாட்களில் மயானத்துக்கு இடம் அளிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையறிந்து அய்யப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
கிராம பிரமுகர் கோவிந்த் கூறியதாவது:
பல ஆண்டுகளாக மயானம் இல்லாததால், இறந்தவர் உடலை, ஏரிக்கரையில் தான் புதைத்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கென மயானம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று பல முறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளோம். ஆனால் இன்னும் மயானத்துக்கு நிலம் ஒதுக்கவில்லை.
வருவாய்த் துறை, சர்வே அதிகாரிகள் 15 நாட்களில் மயானத்துக்கு நிலம் ஒதுக்குவதாக கூறியுள்ளனர். அதுவரை எங்கள் கிராமத்தினர் பொறுமையாக இருக்க உள்ளோம். மயானத்திற்கு நிலம் ஒதுக்க தவறினால், எங்கள் கிராமத்தில் யார் இறந்தாலும் பிணத்தை அடக்கம் செய்யாமல், தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்து போராட்டம் நடத்துவோம். தாலுகா அலுவலகத்திலேயே பிணத்தை வைத்து விட்டுச் செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.