கிரீன் சிக்னல் கொடுத்தது ரயில்வே; வினேஷ், பஜ்ரங் ராஜினாமா ஏற்பு; ஹரியானா தேர்தல் களம் பரபர
கிரீன் சிக்னல் கொடுத்தது ரயில்வே; வினேஷ், பஜ்ரங் ராஜினாமா ஏற்பு; ஹரியானா தேர்தல் களம் பரபர
ADDED : செப் 09, 2024 01:18 PM

புதுடில்லி: மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரின் ரயில்வே பதவி ராஜினாமாவை இந்திய ரயில்வே ஏற்று கொண்டது. இதனால் இருவரும் ஹரியானா சட்டசபை தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்யும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
ஹரியானாவில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் எதிரொலியாக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. அதில் 31 வேட்பாளர்களின் பெயர்கள் இடபெற்று உள்ளன. சமீபத்தில் டில்லியில் ராகுலை சந்தித்த மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரசில் இணைந்தனர்.
தேர்தலில் போட்டியிட 'சீட்'
இவர்களை ஐஸ் வைப்பதற்கு காங்கிரஸ் கட்சியும் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. வினேஷ் போகத்துக்கு ஜூலானா தொகுதியில் போட்டியிட சீட் வழங்கி உள்ளது. அகில இந்திய கிசான் காங்கிரசின் செயல் தலைவராக பஜ்ரங் புனியாவிற்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. கட்சியில் இணைவதற்கு முன்பு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் ரயில்வேயில் தாம் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்தனர். தங்களின் ராஜினாமா கடிதங்களை ரயில்வே நிர்வாகத்துக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.
ஆனால் இரு தினங்களுக்கு மேலாக, இருவரின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்படாமல் இருந்தது. ரயில்வே நிர்வாகத்தால் ராஜினாமா அதிகாரப்பூர்வமாக ஏற்கப்படாத நிலையில் கட்சியின் உறுப்பினர் அட்டையை பெற்றது செல்லாது, தேர்தலில் நிற்க முடியாது. அரசு பணியில் உள்ள எவரும் ஒரு கட்சியிலோ அல்லது தேர்தலிலோ போட்டியிட முடியாது என விவரம் தெரிந்த அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
ராஜினாமா ஏற்பு
இந்நிலையில், இன்று(செப்.,09) வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரின் ரயில்வே பதவி ராஜினாமாவை இந்திய ரயில்வே ஏற்று கொண்டது. இதனால் இருவரும் ஹரியானா சட்டசபை தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்யும் வாய்ப்பு உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும், ஆளும் பா.ஜ., அரசை ஆட்சியில் இருந்து அகற்றி, காங்கிரசை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.