காங்கிரசில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா: ஹரியானா தேர்தலில் களமிறங்க தயார்
காங்கிரசில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா: ஹரியானா தேர்தலில் களமிறங்க தயார்
ADDED : செப் 06, 2024 03:47 PM

புதுடில்லி: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் இன்று (செப்.,6) காங்கிரசில் இணைந்தனர். ஹரியானா சட்டசபை தேர்தலில் இருவரும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் போட்டியில் பைனல் வரை சென்றார். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது இந்தியர்களை அதிர்ச்சியடைய செய்தது. இருந்தும், அவர் நாடு திரும்பியபோது ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
அவருக்கு சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர்களும் ஆதரவளித்தனர். இதற்கிடையே காங்கிரசின் அழைப்பின்பேரில், சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் டில்லியில் சந்தித்து பேசினர். அப்போது இருவரும் ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், வினேஷ் போகத் தனது ரயில்வே பணியை ராஜினாமா செய்தார். அத்துடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர். வரும் அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், அதில் காங்கிரஸ் வேட்பாளராக அவர்கள் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.