மருத்துவமனையில் வினோத் காம்ப்ளி அட்மிட்; தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்!
மருத்துவமனையில் வினோத் காம்ப்ளி அட்மிட்; தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்!
ADDED : டிச 23, 2024 06:48 PM

தானே: முன்னாள் கிரிக்கெட் வீரரும், சச்சினின் பள்ளிக்கால நண்பருமான வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
வினோத் காம்ப்ளி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர். 1988ம் ஆண்டு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி ஜோடி 664 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இந்த போட்டிக்கு பின்னர் இருவர் மீதும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பார்வை திரும்பியது.
இருவரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தனர். இணைந்தும் தனித்தனியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தனர். 1996ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர், சரியாக விளையாடாததால் அணியில் இருந்து காம்ப்ளி நீக்கப்பட்டார்.
அதன் பிறகு அவருக்கு தனிப்பட்ட முறையில் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டன. அணியில் இருந்து விலக்கப்பட்டது, திருமண உறவில் ஏற்பட்ட பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அவரை, குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு வர, கபில்தேவ், சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர்.ஆனால், அதற்கு காம்ப்ளி ஒத்துழைப்பு தரவில்லை. இதனால், உடல்நலம் பாதிப்பில் இருந்து வருகிறார். மறைந்த தமது பயிற்சியாளர் அச்சரேகர் (சச்சினுக்கும் இவர் தான் பயிற்சியாளர்) நினைவிட நிகழ்வில் சமீபத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் 52 வயதான வினோத் காம்ப்ளிக்கு இன்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட, தானேவில் உள்ள பிரபல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
மருத்துவமனையில் வினோத் காம்ப்ளி சிகிச்சை பெற்று வருவதை அறிந்த ரசிகர் ஒருவர், அங்கு சென்று அவரை சந்தித்து வீடியோ மற்றும் போட்டோ எடுத்து உள்ளார். அதை இணையத்தில் வெளியிட, பலரும் அதை கண்டு வினோத் காம்ப்ளி விரைவில் குணம் அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
வினோத் காம்ப்ளி உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், தொடர் கண்காணிப்பில் அவர் உள்ளார், உடல்நிலை சீராக இருக்கிறது என்று கூறி உள்ளனர்.

