மணிப்பூரில் மீண்டும் வன்முறை கூகி இனத்தவர் மூவர் கொலை
மணிப்பூரில் மீண்டும் வன்முறை கூகி இனத்தவர் மூவர் கொலை
ADDED : ஜூன் 06, 2026 05:21 AM
இம்பால்; மணிப்பூரில் நேற்று அதிகாலை மீண்டும் நடந்த வன்முறை சம்பவத்தில், கூகி இனத்தை சேர்ந்த மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்; ஏழு வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த, 2023ல் மெய்டி மற்றும் கூகி பழங்குடியினர் இடையே இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னையில் மோதல் ஏற்பட்டது.
இது, வன்முறையாக மாறியதில், 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டதை அடுத்து, அங்கு அமைதி திரும்பியது.
இந்நிலையில், கங்போக்பி மாவட்டத்தில் உள்ள, சைது கம்பாசோல் அருகேயுள்ள லோப்பால் குல்லன் கிராமத்தில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு கூகி இனத்தவர்களும் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சண்டையில் கூகி இனத்தை சேர்ந்த லெட்கோங்கம் ஹோகிப், அவரது மனைவி தின்மரி ஹோகிப் மற்றும் ஜங்க்மின்லால் ஹோகிப் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இது தவிர கூகி இனத்தவர்களின் வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதில், ஏழு வீடுகள் எரிந்து சேதமடைந்ததாக கூகி அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு, 'தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் ஆப் நா கலிம்' மற்றும் அதன் துணை அமைப்பான 'ஜிலியாகிராங் ஒற்றுமை அணி'யே காரணம் என , கூகி இன்பி மணிப்பூர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
