மே.வங்கத்தில் நிலவும் வன்முறை; மக்கள் அமைதி காக்கும்படி மம்தா வேண்டுகோள்
மே.வங்கத்தில் நிலவும் வன்முறை; மக்கள் அமைதி காக்கும்படி மம்தா வேண்டுகோள்
ADDED : ஏப் 15, 2025 08:30 AM

கோல்கட்டா: ''மக்கள் அமைதியைப் பேண வேண்டும். வன்முறையைத் தூண்டுவதற்கு மதத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்'' என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.
மேற்கு வங்கத்தில் வக்ப் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. முர்ஷிதாபாதில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட, போலீசார் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
வன்முறைக்கு மத்தியில், மக்கள் அமைதியைப் பேண வேண்டும். வன்முறையைத் தூண்டுவதற்கு மதத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து, மம்தா பானர்ஜி கூறியதாவது: தர்மம் என்பது பக்தி, பாசம், மனிதநேயம், அமைதி, நட்பு, கலாச்சாரம், நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றைக் குறிக்கிறது.
நாம் தனியாகப் பிறக்கிறோம், தனியாகவே இறக்கிறோம்; பிறகு ஏன் சண்டையிட வேண்டும்? ஏன் கலவரங்கள், போர் அல்லது அமைதியின்மை? அனுமதியுடன் அமைதியான போராட்டங்களை நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், யாராக இருந்தாலும் சரி, சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
யாராவது உங்களைத் தூண்டிவிட முயற்சிக்கும்போது, வலையில் சிக்க வேண்டாம். வக்ப் திருத்தச் சட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. எனவே நீங்கள் விரும்பும் பதிலை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும். இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்த சட்டம் மாநிலத்தில் செயல்படுத்தப்படாது. அப்படியானால் கலவரம் எதற்காக நடக்கிறது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.