லோக்சபாவில் வக்பு மசோதாவை எதிர்த்து கடும் அமளி!: கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது அரசு
லோக்சபாவில் வக்பு மசோதாவை எதிர்த்து கடும் அமளி!: கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது அரசு
ADDED : ஆக 09, 2024 12:41 AM

புதுடில்லி: வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அந்த மசோதா பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சட்டங்களால் மதம் மற்றும் தொண்டு பணிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளவற்றுக்காக, முஸ்லிம்கள் நன்கொடைகளை வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கப்படும் சொத்துக்கள், 'அவ்காப்' என்றும், நன்கொடை வழங்குவோர் 'வாகிப்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு வழங்கப்படும் சொத்துக்களை நிர்வகிக்க, வக்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. மாநில அளவில் 30 வக்பு வாரியங்களும், தேசிய அளவில் வக்பு கவுன்சிலும் இவற்றை நிர்வகிக்கின்றன. இதைத்தவிர, வக்பு தீர்ப்பாயமும் உள்ளது.
கட்டுப்பாடுகள்
நாடு முழுதும், 9.4 லட்சம் ஏக்கர் நிலப்பரப்புள்ள, 8.7 லட்சம் சொத்துக்கள் வக்பு வாரியங்களிடம் உள்ளன. வக்பு சொத்துக்கள் நிர்வகிப்பது தொடர்பாக, 1923ல் சட்டம் இயற்றப்பட்டது. இது, 1995ல் மாற்றி அமைக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2013ல் இதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன் வாயிலாக வக்பு சொத்துக்கள் தொடர்பான பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
இந்நிலையில், வக்பு சொத்துக்கள் வாயிலாக, 200 கோடி ரூபாய் மட்டுமே ஆண்டு வருவாய் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இது மிக மிக குறைவு.
அதே நேரத்தில், வக்பு சொத்துக்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், பல பொது சொத்துக்கள் வக்பு சொத்துக்களாக அபகரிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை அடுத்து, வக்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முன் வந்தது.
இதன்படி, இது தொடர்புடைய பலருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, வக்பு திருத்த மசோதாவை மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.
இதற்கு, எதிர்க்கட்சிகள் அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, இந்த மசோதாவை, பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
வக்பு சட்டத்தின் பெயரும், ஒருங்கிணைந்த வக்பு நிர்வாகம், அதிகாரமளித்தல், சிறந்த நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு சட்டம் என்று மாற்றப்பட உள்ளது.
இத்துடன், முசல்மான் வக்பு நீக்க மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. வக்பு சட்டம் 1995ல் அமலுக்கு வந்துள்ள நிலையில், 1923ல் அறிமுகமான முசல்மான் வக்பு சட்டம் நீக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, 1923 சட்டத்தை நீக்குவதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத சுதந்திரம்
மசோதாவை தாக்கல் செய்து அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று லோக்சபாவில் பேசியதாவது:
இந்த சட்டத் திருத்த மசோதா எந்த ஒரு மதத்தின் சுதந்திரத்திலும் தலையிடுவதாக இல்லை. இந்த மசோதா, அரசியலமைப்பு சட்டத்தின் எந்த ஒரு பிரிவையும் மீறவும் இல்லை.
முந்தைய காங்கிரஸ் அரசால், 1995ல் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டம், அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றவில்லை.
அந்தத் தவறை நாங்கள் தற்போது சரி செய்கிறோம். என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பல எதிர்க்கட்சி எம்.பி.,க்களும், இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், அரசியல் மற்றும் கட்சி காரணமாக இங்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகின்றனர்.
இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து தவறான பல தகவல்களை தெரிவித்து வருகின்றனர். எந்த ஒரு சட்டமும், அரசியலமைப்பு சட்டத்தைவிட உயர்வானதல்ல. ஆனால், காங்கிரஸ் அரசு வக்பு சட்டத்துக்கு அந்த அதிகாரத்தை அளித்துள்ளது.
இந்த மசோதா முஸ்லிம்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பலன் அளிக்கக் கூடியது. வக்பு சொத்துக்கள் நிர்வாகத்தை சீரமைக்கும் வகையிலேயே, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கோ, அந்த மதத்துக்கோ எதிரானது அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
வக்பு சொத்துக்களை பதிவு செய்யும் அதிகாரம், வாரியங்களில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம், அனைத்து சொத்துக்களையும் பதிவு செய்ய பொதுவான தளம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்யும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது.