சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் எதிரொலியாக மூணாறை புறக்கணிக்குமாறு பதிவுகள் வைரல் சுற்றுலா தொழில் புரிவோர் கலக்கம்
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் எதிரொலியாக மூணாறை புறக்கணிக்குமாறு பதிவுகள் வைரல் சுற்றுலா தொழில் புரிவோர் கலக்கம்
ADDED : அக் 10, 2025 12:16 AM

மூணாறு:சுற்றுலா பயணிகள் தொடர்ந்து தாக்கப்படுவதால் கேரள மாநிலம் மூணாறை புறக்கணிக்குமாறு சமூக வலை தள பதிவுகள் வைரலாகி வருவதால் சுற்றுலா தொழில் புரிவோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் மூணாறுக்கு உள்நாடு, வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. சுற்றுலா பயணிகள் மீது தாக்குதலும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மூன்று தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின.
இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என் பதை சுட்டிக்காட்டி மூணாறுக்கு செல்ல வேண்டாம் எனவும் மாறாக ஆனச்சால், தோக்குப்பாறை, சின்னக்கானல், கொழுக்குமலை, மறையூர், காந்தலூர் உள்பட வேறு பகுதிகளுக்கு செல்ல சமூகவலை தளங்களில் பதிவிடப்பட்டு அது வைரலாகி வருகிறது. இதனால் சுற்றுலா தொழில் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அதனை நம்பி தொழில் புரிவோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
கண்காணிப்பு தீவிரம்
சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தில் மூணாறு போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 24 மணி நேரம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி நிழல் போலீஸ் பிரிவும் பணியமர்த்தப்பட்டுள்ளது. அப்பணியில் ஐந்து பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளதாக டி.எஸ்.பி., சந்திரகுமார் தெரிவித்தார்.
அதிகரிப்பு
மூணாறில் இருந்து 32 கி.மீ., துாரத்திலுள்ள டாப் ஸ்டேஷன் முக்கிய சுற்றுலா பகுதியாகும். அப்பகுதி தேனி மாவட்டம் குரங்கணி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்டது. அப்பகுதிக்கு மூணாறு வழியாக செல்ல வேண்டும் என்பதால், தமிழக அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவது இல்லை.
அதனால் ஆக்கிரமிப்புகள், குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு சுற்றுலா பயணிகளுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டும் வெளி உலகிற்கு தெரிவதில்லை. குரங்கணி போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்பதால் பயணிகள் புகார் அளிக்க முன்வருவதில்லை.
இறுதியாக அக்., 4ல் கொல்லத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வாகனத்தை பெண் ஒருவர் கம்பு கொண்டு அடித்து விரட்டும் காட்சி சமூக வலை தளங்களில் வைரலானது. சம்பந்தப்பட்ட பயணிகள் குரங்கணி செல்ல இயலாததால் புகார் அளிக்காமல் சொந்த ஊர் திரும்பினர்.
டாப் ஸ்டேஷனில் குற்றச்சம்பவங்களை தவிர்க்க அங்கு புறக்காவல் நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. அதற்கு தேனி மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.