ADDED : அக் 26, 2024 08:04 AM

பெங்களூரு: “முதல்வர் சித்தராமையா மீது குற்றஞ்சாட்ட, விஸ்வநாத் யார்? அவருக்கு என்ன உரிமை உள்ளது?” என, நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தினமும் பொழுது விடிந்தால், முதல்வர் சித்தராமையா, யதீந்திரா, பார்வதம்மா மீது குற்றஞ்சாட்டுவதே, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத்தின் வேலையாக உள்ளது. அவருக்கு மூளை கலங்கியுள்ளது; நிமான்சில் சேர்க்க வேண்டும். முதல்வர் சித்தராமையா மீது குற்றஞ்சாட்ட அவர் யார்? அவருக்கு என்ன உரிமை உள்ளது?
இவர், முடாவில் வீட்டுமனை கேட்டார். கொடுக்கவில்லை என்பதால், இதுபோன்று குற்றஞ்சாட்டுகிறார். ஹோட்டல், மால், பெட்ரோல் பங்க் உள்ள இடம் எங்களுடையது. அது என் தாத்தா வாங்கிய இடம். அதற்கான ஆவணம் என்னிடம் உள்ளது.
என் தாத்தாவின் சொத்துக்கும், சித்தராமையாவுக்கும் என்ன சம்பந்தம்? விஸ்வநாத்தின் பேச்சு எல்லை மீறுகிறது. நாங்கள் எவ்வளவுதான் சகித்துக் கொள்வது? அவர் மீது மானநஷ்ட வழக்குப் பதிவு செய்துள்ளோம். நீதிமன்றமும் அவரை கண்டித்தது. இத்தனைக்கு பின்னும் பைத்தியம் போன்று பேசுகிறார். இவர் மீது மற்றொரு கிரிமினல் வழக்குப் பதிவு செய்வோம்.
சித்தராமையாவுடன், விஸ்வநாத்தை ஒப்பிட முடியாது. சித்தராமையாவை காங்கிரசுக்கு அழைத்து வந்தது சோனியா. காங்கிரஸ், விஸ்வநாத் அப்பன் வீட்டு சொத்து அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.