லால்பாக்கில் மலர் அலங்கார கலை கண்காட்சி பார்வையாளர்கள் மெய்சிலிர்ப்பு
லால்பாக்கில் மலர் அலங்கார கலை கண்காட்சி பார்வையாளர்கள் மெய்சிலிர்ப்பு
ADDED : ஜன 21, 2024 01:11 AM

பெங்களூரு : பெங்களூரு லால்பாக்கில் நடந்து வரும் மலர் கண்காட்சியை ஒட்டி, ஐக்கிபானா எனும் மலர் அலங்கார கலை கண்காட்சி நேற்று நடந்தது. பல்வேறு மலர்களால் வடிவமைக்கப்பட்ட அலங்காரத்தை பார்வையிட்டு, பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர்.
குடியரசு, சுதந்திர தினத்தை ஒட்டி, பெங்களூரு லால்பாக்கில் மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு, 215வது, மலர் கண்காட்சி 18ம் தேதி துவங்கியது. முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். லால்பாக்கின் மைய பகுதியில் உள்ள, கண்ணாடி மாளிகையில் அனுபவ மண்டபம், மலர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தோட்டக்கலை துறை சார்பில், லால்பாக்கில் நேற்று ஐக்கிபானா எனும் ஜப்பானிய மலர் அலங்கார கலை, தாய் ஆர்ட் எனும் தாய்லாந்து நாட்டின் கட்டட கலை, சிற்பம், ஓவியம், அலங்காரத்தை வெளிப்படுத்தும் போட்டிகள் நேற்று நடந்தன.
இந்த போட்டியில் பங்கேற்க பெயர் கொடுத்தவர்கள், பல்வேறு மலர்களை கொண்டு தாங்கள் வடிவமைத்த அலங்காரங்கள், சிற்பங்களை பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.
மலர் அலங்காரங்கள், சிற்பம், ஓவியங்களை உற்சாகமாக பார்த்து, பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர். மொபைல் போன்களில் உற்சாகமாக 'செல்பி' எடுத்துக் கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 27ம் தேதி, பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையில் விடுமுறை தினமான நேற்று காலை 7:00 மணி முதல், லால்பாக்கிற்கு மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. மலர்களால் வடிவமைக்கப்பட்ட அனுபவ மண்டபம், பசவண்ணர் சிலையை கண்டு ரசித்தனர்.

