ADDED : அக் 11, 2025 07:27 AM

புதுடில்லி : டில்லியில், நகைக்கடையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில், முன்னாள் 'வாலிபால்' வீரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
டில்லியில், ரோஹினி செக்டார் - 18 என்ற பகுதியில் நகைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளரின் உறவினரான விஷால் என்பவர், கடந்த 4ல், இரண்டு பேருடன் நகைக்கடைக்கு வந்தார். அப்போது, தங்க செயின்களை காட்டும்படி அவர் கூறியுள்ளார்.
தங்க செயின்கள் உள்ள டிரேயை ஊழியர்கள் எடுத்து காட்டினர். அப்போது விஷாலுடன் வந்த இருவரில் ஒருவர், மிளகு பொடியை ஊழியர்கள் மீது வீசினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மூவரும், தங்க செயின்கள் இருந்த டிரேயை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர்.
நகைக் கடையில் இருந்த 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து விசாரித்த போலீசார், விஷால் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'நகைக் கடையில் கொள்ளை அடித்த விஷால் வர்மா, மணீஷ் வர்மா, சுமித் டபாஸ் ஆகியோரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டுள்ளோம். இதில், சுமித் முன்னாள் தேசிய வாலிபால் வீரர். இவர், 2024ல் கொலை வழக்கில் திஹார் சிறையில் இருந்த போது, போக்சோ வழக்கில் அதே சிறையில் விஷால் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது இருவரும் அறிமுகமாகி உள்ளனர். சொந்த செலவுக்காக இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டனர்' என்றனர்.