ADDED : ஜூன் 28, 2025 01:08 AM

அமராவதி: ஆந்திராவில், வாகன பேரணியின் போது கார் அடியில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான கைது நடவடிக்கைக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்துஉள்ளது.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநில முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெட்டி ரெண்டபல்லா கிராமத்துக்கு கடந்த 18ம் தேதி சென்றார்.
ஓராண்டுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட தன் கட்சி தொண்டர் வீட்டுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.
எதுக்கூரு பைபாஸ் சாலை வழியாக அவரது கார் அணிவகுத்து சென்றபோது, பின்தொடர்ந்த கூட்டத்தில் இருந்த செலி சிங்கையா, 55, என்பவர் மலர்களை துாவியபடி வந்தார்.
அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது ஜெகனின் கார் ஏறி இறங்கியது. படுகாயமடைந்த சிங்கையா, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து, சிங்கையாவின் மனைவி செலி லுார்து மேரி அளித்த புகாரின்படி, ஜெகன்மோகன் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ஜெகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'இந்த வழக்கில் என் பெயர் திட்டமிட்டே சேர்க்கப்பட்டுள்ளது. பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்' என, கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், 'பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்படும் மஹா கும்பமேளாவில் கூட இது போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.
'இந்த வழக்கு தொடர்பாக அடுத்த உத்தரவு வரும் வரை மனுதாரர் ஜெகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. வழக்கு ஜூலை 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என, தெரிவித்தார். இந்த உத்தரவால் ஜெகன் தரப்பு நிம்மதிஅடைந்துள்ளது.