வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும்: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் திட்டவட்டம்
வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும்: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் திட்டவட்டம்
UPDATED : ஜூலை 10, 2025 03:18 PM
ADDED : ஜூலை 10, 2025 03:08 PM

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும் என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதற்கு, வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சுதன்ஷு துலியா, ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ''ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக கருத முடியாது. வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும். குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் தான் முடிவு எடுக்க வேண்டும். பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது சரிதான். இதற்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.
பின்னர், சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:
* வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும்.
* தேர்தல் இல்லாத காலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையை செய்யலாமே?
* குறுகிய கால அவகாசத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது ஏன்?
* குடியுரிமையை நீங்கள் சரிபார்க்க வேண்டுமென்றால், நீங்கள் சீக்கிரமாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்; இது சற்று தாமதமானது.
* ஆதார், வாக்காளர் ஐடி, ரேஷன் கார்டு ஆகியவற்றை தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நிறுத்த, சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.