ADDED : ஜன 23, 2024 05:48 AM
பெங்களூரு: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வரும் 25ல், அனைத்து அரசு அலுவலகங்களில், உறுதிமொழி எடுக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு பிறப்பித்த சுற்றறிக்கை:
தேசிய வாக்காளர் தினம், ஜனவரி 25ல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் மாநில அளவில் வாக்காளர் தினம் கொண்டாட வேண்டும். அன்றைய தினம், 'ஓட்டுப்பதிவை விட, சிறப்பானது வேறொன்றில்லை. நான் இலவசமாக ஓட்டுப் போடுவேன்' என உறுதிமொழி ஏற்க வேண்டும்.
அன்று காலை 11:30 மணிக்கு, மத்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள தேர்தல் நெறிமுறைப்படி, அரசின் அனைத்து துறைகளின் ஊழியர்கள், அதிகாரிகள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, உறுதிமொழி ஏற்க வேண்டும்.
பள்ளி, கல்லுாரிகளில் வாக்காளர் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி குறித்து, போட்டோவுடன் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரிகள் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவது கட்டாயம்.
அரசின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், 'ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள, இந்திய குடிமக்களான நாங்கள், எங்கள் நாட்டின் ஜனநாயக சம்பிரதாயங்கள், அமைதியான, நியாயமான தேர்தல் நடைமுறையின் மதிப்பை உயர்த்துவோம்.
ஒவ்வொரு தேர்தலிலும், பயமின்றி ஜாதி, மதம் பார்க்காமல், ஆசை வார்த்தைகளுக்கு பணியாமல் ஓட்டுப்போடுகிறோம்' என உறுதிமொழி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

