ஜார்க்கண்டில் 67.59%, மஹாராஷ்டிராவில் 58.22% ஓட்டுப்பதிவு; தேர்தல் கமிஷன் 'அப்டேட்'
ஜார்க்கண்டில் 67.59%, மஹாராஷ்டிராவில் 58.22% ஓட்டுப்பதிவு; தேர்தல் கமிஷன் 'அப்டேட்'
UPDATED : நவ 20, 2024 06:47 PM
ADDED : நவ 20, 2024 07:28 AM

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் இன்று (நவ.,20) ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜார்க்கண்டில், 38 தொகுதிகளில் கடைசி மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
மாலை 5 மணி நிலவரப்படி, ஜார்க்கண்டில் 67.59 சதவீதமும், மஹாராஷ்டிராவில் 58.22 சதவீதமும் ஓட்டுப்பதிவாகி உள்ளது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு, இன்று (நவ.,20) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்., சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
சட்டசபை தேர்தலுக்காக, 1,00,186 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இந்த தேர்தலில், 4,140 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாலை 5 மணி நிலவரப்படி, 58.22சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.
ஜார்க்கண்ட் தேர்தல்
ஜார்க்கண்டில், கடந்த 13ல், 43 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில் மீதமுள்ள 38 தொகுதிகளில், கடைசி மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, 14,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாலை 5 மணி நிலவரப்படி ஜார்க்கண்டில் 67.59 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.
பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜார்க்கண்டில் இரண்டாம் கட்ட ஜனநாயக திருவிழா இன்று நடைபெறுகிறது. அதில் அனைவரும் ஓட்டளித்து புதிய சாதனை படைக்க வேண்டும். இளைஞர்களின் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் மாநிலத்திற்கு பலம் சேர்க்கும்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மாநில வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் ஜனநாயகக் கொண்டாட்டத்தில் பங்கேற்று ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் ஆர்வமுடன் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.