'பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டால் ராமருக்கு போட்டது போன்றதாகும்'
'பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டால் ராமருக்கு போட்டது போன்றதாகும்'
ADDED : பிப் 07, 2024 11:14 PM

உத்தர கன்னடா: ''பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட்டால், ராமருக்கு ஓட்டுப் போட்டது போன்றதாகும். நாட்டின் ஒருமைப்பாடுக்கு ஓட்டுப் போடுங்கள். பிரதமர் நரேந்திர மோடிக்காக ஓட்டுப் போடுங்கள் என்று வாக்காளர்களிடம் தொண்டர்கள் சொல்ல வேண்டும்,'' என, முன்னாள் சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி அழைப்பு விடுத்தார்.
உத்தர கன்னடா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, ஆறு முறை எம்.பி.,யானவர் பா.ஜ.,வின் அனந்தகுமார் ஹெக்டே. 2017ல் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
ஆனால், இம்முறை லோக்சபா தேர்தலில் அவருக்கு சீட் வழங்க, சில தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், முன்னாள் சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரிக்கு வாய்ப்பு வழங்க பா.ஜ., மேலிடம் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருவரும் தொகுதி பிரமுகர்களை தனி தனியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். தொகுதி மக்களின் பிரச்னைகளை கேட்டு, முடிந்தவரை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.
இதற்கிடையில், சிர்சியில் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி பிரசாரத்தைத் துவக்கிவிட்டார். அங்கு நடந்த தொண்டர்கள் கூட்டத்தில் நேற்று பேசியதாவது:
உத்தர கன்னடா லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளரின் சின்னம் தாமரை. வேட்பாளர் யார் என்பதை, கட்சி மேலிடம் சரியான நேரத்தில் அறிவிக்கும். கடந்த முறை 4.80 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இம்முறை அதை விட, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ., வெற்றி பெறும்.
பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட்டால், ராமருக்கு ஓட்டுப் போட்டது போன்றதாகும். நாட்டின் ஒருமைப்பாடுக்கு ஓட்டுப் போடுங்கள். பிரதமர் மோடிக்காக ஓட்டுப் போடுங்கள் என்று வாக்காளர்களிடம் தொண்டர்கள் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

