இன்று 10 மாநிலங்களில் உள்ள 96 லோக்சபா தொகுதிகளில்...ஓட்டுப்பதிவு!
இன்று 10 மாநிலங்களில் உள்ள 96 லோக்சபா தொகுதிகளில்...ஓட்டுப்பதிவு!
UPDATED : மே 13, 2024 02:18 AM
ADDED : மே 12, 2024 11:52 PM

புதுடில்லி:பீஹார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. லோக்சபாவுக்கான இந்த நான்காம் கட்ட தேர்தலுடன் சேர்த்து, ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சட்டசபை தேர்தலும் நடப்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
நாடு முழுதும் 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஏழு கட்டங்களாக நடக்கிறது.
283 தொகுதிகள்
ஏப்., 19ல் நடந்த முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கும், ஏப்., 26ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கும், மே 7ல் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில், மூன்று கட்ட தேர்தல்களையும் சேர்த்து, 283 தொகுதிகளுக்கு இதுவரை ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.
இந்நிலையில், நான்காம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதில், 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆந்திராவில் 25; பீஹாரில் ஐந்து; ஜார்க்கண்டில் நான்கு; மத்திய பிரதேசத்தில் எட்டு; மஹாராஷ்டிராவில் 11; ஒடிசாவில் நான்கு; தெலுங்கானாவில் 17; உத்தர பிரதேசத்தில் 13; மேற்கு வங்கத்தில் எட்டு மற்றும் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
பாதுகாப்பு
மேலும், ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 147 தொகுதிகளில், முதற்கட்டமாக 28 தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணி வரை நடக்கவுள்ளது.
இதை முன்னிட்டு, ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஓட்டுப்பதிவு சுமுகமாக நடைபெறுவதை கண்காணிக்க, தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் பணியில் உள்ளனர்.
ஜூன் 4 ல் எண்ணிக்கை
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கன்னோஜ் தொகுதியிலும்; பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பெகுசராய் தொகுதியிலும், லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பஹரம்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
திரிணமுல் காங்., நிர்வாகியும், பார்லி.,யில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், எம்.பி., பதவியில் இருந்து நீக்கப்பட்டவருமான மஹுவா மொய்த்ரா, கிருஷ்ணா நகர் தொகுதியிலும்; ஆந்திரா காங்., தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா தொகுதியிலும் களம் காண்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, வரும் 20ல் ஐந்தாம் கட்ட தேர்தலில், எட்டு மாநிலங்களில், 49 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஏழு கட்ட தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள், அடுத்த மாதம் 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.