தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/புதுச்சேரி, அசாம், கேரளாவில் நாளை ஓட்டு பதிவு!

புதுச்சேரி, அசாம், கேரளாவில் நாளை ஓட்டு பதிவு!

புதுச்சேரி, அசாம், கேரளாவில் நாளை ஓட்டு பதிவு!


UPDATED : ஏப் 08, 2026 12:10 AM

ADDED : ஏப் 07, 2026 11:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2026 12:10 AM ADDED : ஏப் 07, 2026 11:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: யூனியன் பிரதேசமான புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில், நாளை ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. பரபரப்பாக நடந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம், நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான தேதியை, கடந்த 15ல் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதன்படி, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாமில், நாளையும்; தமிழகத்தில் 23ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் மட்டும், வரும் 23 மற்றும் 29ல் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில், நேற்று மாலை 5:00 மணியுடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

புதுச்சேரி


யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம், 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி, தி.மு.க., - காங்., கூட்டணி, நடிகர் விஜயின் த.வெ.க., மற்றும் சீமானின் நா.த.க., இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலில் ஓட்டு போட, 9.50 லட்சம் வாக்காளர்கள் தகுதி உடையவர்கள். இவர்களில், 5 லட்சம் பேர் பெண்கள்; 4.46 லட்சம் பேர் ஆண்கள். 30 தொகுதிகளில், 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆளும் கூட்டணியை ஆதரித்து, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

தி.மு.க., - காங்., கூட்டணியை ஆதரித்து, தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். த.வெ.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் விஜயும் பிரசாரம் செய்தார்.

கேரளா


மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கும் கேரளாவி ல், மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தொடர்ந்து இரண்டு முறை வென்ற இந்த கூட்டணி, மூன்றாவது வெற்றியை எதிர்பார்த்துள்ளது. இந்த முறை ஆட்சியை கைப்பற்றுவதில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி முனைப்புடன் உள்ளது.

கேரளாவில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின், 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 1.32 கோடி பேர் ஆண்கள். 1.39 கோடி பேர் பெண்கள்.

இந்த தேர்தலுக்காக, 32,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 140 தொகுதிகளில், 883 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்த நிலையில், காங்கிரசுக்காக அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் ஓட்டு சேகரித்தனர்.

பா.ஜ.,வுக்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

அசாம்


முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் வடகிழக்கு மாநிலமான அசாமில், 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தொடர்ச்சியாக இரு முறை வென்ற பா.ஜ., மூன்றாவது வெற்றிக்காக அயராது உழைத்து வருகிறது. ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

அசாமில் மொத்தம், 2.50 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 1.25 கோடி பேர் ஆண்கள்; 1.25 கோடி பேர் பெண்கள்; 318 பேர் மூன்றாம் பாலினத்தவர். ஓட்டுப்பதிவுக்காக, 31,490 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 126 தொகுதிகளில், 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பா.ஜ.,வை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்டோர் பிரசாரம் செய்த நிலையில், காங்கிரசுக்காக ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

மூன்று மாநிலங்களிலும் பதிவாகும் ஓட்டுகள், தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின், மே 4ல் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us