'இண்டிகோ'வுக்கு எதிரான சபதம்: யெச்சூரிக்காக கைவிட்ட தோழர்
'இண்டிகோ'வுக்கு எதிரான சபதம்: யெச்சூரிக்காக கைவிட்ட தோழர்
ADDED : செப் 14, 2024 05:23 AM

கோழிக்கோடு: இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கசப்பான சம்பவம் காரணமாக, 'இண்டிகோ' நிறுவனத்தின் விமானத்தில் இனி பயணம் செய்ய மாட்டேன் என சபதம் செய்திருந்த மார்க்.கம்யூ., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.பி.ஜெயராஜன், யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தன் சபதத்தை வாபஸ் பெற்றார்.
கேரளாவின் கண்ணுாரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இண்டிகோ விமானம், 2022 ஜூன் 13ல் சென்றது. இந்த விமானத்தில், முதல்வர் பினராயி விஜயன், மார்க்.கம்யூ., மூத்த தலைவர் இ.பி.ஜெயராஜன், 74, ஆகியோர் பயணித்தனர். மேலும் இதில், காங்., இளைஞரணி நிர்வாகிகள் இருவரும் பயணித்தனர். திருவனந்தபுரத்தில் விமானம் தரையிறங்கியதும், தங்க கடத்தல் வழக்கு விவகாரத்தில், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக, காங்., இளைஞரணி நிர்வாகிகள் முழக்கம் எழுப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த இ.பி.ஜெயராஜன், அந்த இருவரையும் பிடித்து தள்ளினார். இதை கவனத்தில் எடுத்த இண்டிகோ, தங்கள் நிறுவனத்தின் விமானத்தில் பறக்க, இ.பி.ஜெயராஜனுக்கு மூன்று வாரங்கள் தடை விதித்தது. இதனால் அதிருப்தி அடைந்த இ.பி.ஜெயராஜன், 'இனி வரும் காலங்களில் நானும், என் குடும்பத்தினரும் இண்டிகோ விமானத்தில் பயணிக்க மாட்டோம்' என ஆவேசமாகக் கூறினார்.
இந்த சபதத்தின்படி, இரு ஆண்டுகளாக இண்டிகோ நிறுவனத்தை புறக்கணித்து வந்த இ.பி.ஜெயராஜன், நேற்று முன்தினம் இதை கைவிட்டு, டில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இது குறித்து, இ.பி.ஜெயராஜன் கூறுகையில், “மறைந்த மார்க்.கம்யூ., பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்த, டில்லிக்கு விரைவாக செல்ல வேண்டும் என்பதால், இண்டிகோ விமானத்தில் பயணித்தேன். அவரை விட பெரியது எதுவும் இல்லை,” என்றார்.

