பீஹாரில் சாலையில் கொட்டப்பட்ட விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள்; அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
பீஹாரில் சாலையில் கொட்டப்பட்ட விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள்; அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
ADDED : நவ 08, 2025 08:34 PM

பாட்னா; பீஹாரில் சமஸ்திபூர் மாவட்டத்தில் கல்லூரி அருகே சாலையில் குவியல்,குவியலாக விவிபேட் சீட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் கமிஷனைச் சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பீஹார் சட்டசபைக்கான முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்து விட்டது. 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நவ.11ம் தேதி நடக்க உள்ளது. இந் நிலையில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற சமஸ்திபூரில் உள்ள ஒரு கல்லூரி அருகே சாலைகளில் குவியல், குவியலாக விவிபேட் சீட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சீட்டுகள், சரைன்ரஞ்சன் சட்டசபை தொகுதியின் கீழ் உள்ள ஓட்டு மையத்திற்கு அருகில் இருந்த விவரமும் வெளியானது.
இதையடுத்து, சமஸ்திபூர் மாவட்ட தேர்தல் அதிகாரி ரோஷன் குஷ்வாஹா சம்பவ பகுதிக்கு நேரில் சென்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதோடு, எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, பணியில் அலட்சியம் காட்டியதாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய தேர்தல் கமிஷனர் ஞானேஷ்வர் குமார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்த மாவட்ட அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஓட்டுச்சீட்டுகள் எல்லாம், மாதிரி ஓட்டுச்சீட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நன்றாக வேலை செய்கிறதா என்பதை சரிபார்க்க, உண்மையான ஓட்டு அளிக்கும் முன் நடத்தப்பட்ட போலி ஓட்டுப்பதிவு சீட்டுகள்.
இவ்வாறு அவர் கூறினார்.

