தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/காத்திருந்து காத்திருந்து ஏமாந்த பா.ஜ.,!

காத்திருந்து காத்திருந்து ஏமாந்த பா.ஜ.,!

காத்திருந்து காத்திருந்து ஏமாந்த பா.ஜ.,!


ADDED : ஏப் 04, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில், கடைசி நேரம் வரை இழுத்தடிப்பதற்கு பெயர் போன கட்சி, காங்கிரஸ். கடந்த ஆண்டு நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில், முதல்கட்ட தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், அக்டோபர் 17. வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்ட நாள் அக்டோபர் 16!

தமிழகத்திலும், வேட்பு மனு தாக்கலுக்கு, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பல சர்ச்சைகளுக்கு பின், நேற்று தான் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது. வழக்கமாக கட்டுக்கோப்பான கட்சியாக தோற்றமளித்து, இதிலெல்லாம் முந்திக்கொள்ளும் பா.ஜ.,வும், காங்கிரஸை போல் நேற்று தான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பா.ஜ., தொகுதி தேர்வில் தடுமாற்றத்திற்கு பின், வேட்பாளர் பட்டியல் விவகாரமும் சுவாரசியமான விவாதப் பொருளாகி உள்ளது.

இந்த தேர்தலில், 27 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., 16 தொகுதிகளில், தேர்தலை இதுவரை சந்திக்காதவர்களை நிறுத்தி இருக்கிறது. தேர்தலை சந்தித்து தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த பாலகணபதி, முருகன், தமிழிசை, முருகானந்தம், ராம சீனிவாசன், போஜராஜன், ராதாகிருஷ்ணன் என ஏழு பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. வானதி, நாகேந்திரன், காந்தி, விஜயதாரணி ஆகிய நால்வர் மட்டுமே தேர்தலில் பா.ஜ., சார்பில் வெற்றி கண்டவர்கள்.

வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் தாமதமானதால், அதிரடியான பட்டியல் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பா.ஜ., தொண்டர்களும் அனுதாபிகளும் பெரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

பட்டியல் தாமதமானதற்கு, அ.தி.மு.க.,வின் பாராமுகமே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

தொகுதி எண்ணிக்கையிலும் தேர்விலும் கடும் அதிருப்தியில் இருந்த கட்சி மேலிடம், 'வேட்பாளர்களையாவது சரியாக தேர்வு செய்யுங்கள்' என்று உத்தரவு போட்டது. தொகுதி பங்கீட்டிற்கு மார்ச் 23 - 24ல் சென்னையில் இருந்த பா.ஜ., மேலிட பொறுப்பாளர் பீயூஷ் கோயல், வேட்பாளர் தேர்வில் அப்போது தலையிடவில்லை.

அ.தி.மு.க., தலைமையிடம் எந்தெந்த தொகுதிகளை கேட்கலாம் என்பது பற்றி மட்டுமே, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் 41 தொகுதிகள் அடங்கிய பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அதில், இடம்பெற்றுள்ள தொகுதிகளில் இருந்து 27ஐ கேட்டுப் பெறுமாறு சொல்லிவிட்டு டில்லி கிளம்பிச் சென்றார்.

தொகுதிகளை பா.ஜ.,வினர் கேட்டுப் பெறுவதற்கு முன்பாக, 25ம் தேதியே, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திடுமென ஒருதலைபட்சமாக தொகுதிகளை அறிவித்து விட்டார். பழனிசாமி அறிவித்த பட்டியலுக்கும் பா.ஜ., எதிர்பார்த்த பட்டியலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பது போல் இருந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த பீயூஷ் கோயல், பழனிசாமியிடம் பேசி தொகுதிகளை மாற்றச் சொல்லவும் என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு உத்தரவிட்டார்.

ஆனால், பா.ஜ.,வினரை பே ச்சுக்கு வரச் சொல்லிவிட்டு, பழனிசாமி பிரசாரத்திற்கு வெளியூர் கிளம்பி விட்டார். அன்றிலிருந்து, பழனிசாமியை தொடர்புகொள்ள முயற்சித்தும், இதுபற்றி பேச முன்வரவில்லை. அவருடைய அழைப்பிற்கு காத்திருந்து பயனில்லை என்று, வேட்பாளர் பட்டியலையாவது இறுதி செய்வோம் என, பீயூஷ் கோயல், மார்ச் 31 அன்று மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது தான், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்வதிலும், வெட்டு குத்து அளவுக்கு மோதல் இருப்பதை உணர்ந்தார்.

தேர்வு ஆலோசனைக்காக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அவசர அவசரமாக, புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டரில் வரவழைக்கப்பட்டார். அப்போது, ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பெயர்கள் உள்ள பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியலை எடுத்துக்கொண்டு, மேலிட ஒப்புதலுக்காக, பீயூஷ் கோயல், அன்றே டில்லிக்கு திரும்பிச் சென்றார்.

அ.தி.மு.க.,வின் அணுகுமுறையை கேட்ட அமித் ஷா அதிர்ச்சி அடைந்து, பழனிசாமியிடம், 'நீங்கள் இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவில்லை. எதுவுமே எங்களுக்கு சாதகமாக செய்யவில்லை. இனி மற்றவற்றை தேர்தலுக்கு பின் பார்த்துக்கொள்ளலாம்' என பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலவரத்தை அறிந்த பிரதமரும் கடுப்பாகிவிட்டார். சென்னைக்கு வரும்போது, பிரசாரம் செய்யலாம் என்ற திட்டத்தில் இருந்த பிரதமர்,

'வேட்பாளர்களை இன்னும் முடிவு செய்யாமல் இருந்தால் எப்படி. தேர்தலுக்கு அதிக நாட்கள் இல்லை. வேட்பாளர்களை முடிவு செய்து, அவர்களை வேலையை பார்க்கச் சொல்லுங்கள்' என கூறிவிட்டார்.

தலைநகர் சென்னையில், மயிலாப்பூர் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில், அங்கும் பா.ஜ.,வுக்கு சூழல் சாதகமாக இல்லை என மத்திய உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளதால், அங்கு பிரசாரம் செய்ய வேண்டாம் என, பிரதமர் முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க., தரப்பு கண்டுகொள்ளவில்லை என்றாலும், தமிழக பா.ஜ.,வினர் சுதாரித்து, இன்னும் வேகமாக அனைத்தையும் முடித்திருக்க வேண்டும் என்பது பா.ஜ., மேலிடத்தின் கருத்து. தமிழக பா.ஜ.,வில் உள்ள அதிகார மையங்களுக்கு இடையேயான போட்டியாலும், வேட்பாளர்களை முடிவு செய்வதில் கடும் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில், தன் பெயர் அடிபடாமல் இருக்கவே அண்ணாமலை முற்றிலும் ஒதுங்கி, கேரளா மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு தமிழகம் வந்த பிரதமர், இன்று மதியம் வரை சென்னையில் தங்கி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, அவர், தேர்தலுக்கு பின், அதிரடியாக சில மாற்றங்களை செய்ய முடிவெடுப்பார் என, கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us