மஹாராஷ்டிராவில் தொடரும் காத்திருப்பு; பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் நாளை சந்திப்பு
மஹாராஷ்டிராவில் தொடரும் காத்திருப்பு; பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் நாளை சந்திப்பு
ADDED : டிச 03, 2024 01:47 AM

மும்பை, : மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக, 10 நாட்களாக நிலவி வந்த இழுபறி தொடர்கிறது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நாளை நடக்க உள்ளது. இதில், முதல்வர் யார் என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ., 20ல் நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, 23ம் தேதி முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில், ஆளும் மஹாயுதி கூட்டணி 230 இடங்களில் வென்று, ஆட்சியை தக்க வைத்துள்ளது.
கூட்டணியில் உள்ள பா.ஜ., 132 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 57 இடங்களிலும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்., 41 இடங்களிலும் வென்றன.
இருப்பினும், முதல்வர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. பலகட்ட விவாதங்கள், ஆலோசனைகளுக்கு பின், பா.ஜ., தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதாக ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். ஆனால், துணை முதல்வர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று அவர் கூறினார்.
பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அவரே முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் உள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களாகியும், புதிய அரசு அமைப்பதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. நாளை மறுதினம் புதிய அரசு பதவியேற்கும் என, பா.ஜ., சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும், முதல்வர் பதவி, துணை முதல்வர் பதவிகள் யாருக்கு கிடைக்கும் என்பதில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.
பா.ஜ.,வுக்கு முழு ஆதரவு தருவதாக கூறிஉள்ள அஜித் பவார், மீண்டும் துணை முதல்வர் பதவியை ஏற்பார் என்று கூறப்படுகிறது.
சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவியை வழங்குவதாக பா.ஜ., கூறியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே மறுத்துள்ள நிலையில், அவருடைய மகனும், எம்.பி.,யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு அந்தப் பதவி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், துணை முதல்வர் பதவி போட்டியில் தான் இல்லை என்று ஸ்ரீகாந்த் ஷிண்டே நேற்று கூறியுள்ளார். இதனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த யாருக்காவது துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிவசேனா இல்லாமலேயே, தேசியவாத காங்., ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைக்க முடியும். இருப்பினும், சிவசேனாவை புறந்தள்ள பா.ஜ., தலைமை தயாராக இல்லை.
முதல்வர் பதவி கிடைக்காத நிலையில், துணை முதல்வர் பதவியை நிராகரித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, கூட்டணியில் தொடருவாரா; அவருடைய கட்சியினர் அமைச்சர் பதவிகளை ஏற்பரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.