மக்கள்தொகை கணக்கெடுப்பு வேண்டும்: ராஜ்யசபாவில் சோனியா பேச்சு
மக்கள்தொகை கணக்கெடுப்பு வேண்டும்: ராஜ்யசபாவில் சோனியா பேச்சு
ADDED : பிப் 10, 2025 01:57 PM

புதுடில்லி : '' விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்,'' என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கூறியுள்ளார்.
பூஜ்ய நேரத்தில் ராஜ்யசபாவில் அவர் பேசியதாவது: 2011 ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பு அடிப்படையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளிகள் பயன்பெறுகின்றனர். 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்டஇச்சட்டம், நாட்டின் 140 கோடி மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது. இந்த சட்டமானது, கோவிட் உள்ளிட்ட முக்கிய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் பசியில் வாடுவதை தடுத்தது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், முதல்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளி போடப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு 2021ம் ஆண்டிலேயே நடந்திருக்க வேண்டியது. ஆனால், எப்போது நடக்கும் என்பது தெளிவாக அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி மூலம் இந்த கணக்கெடுப்பு இந்த ஆண்டு நடக்காது என்பதை காட்டுகிறது. இதனால், தகுதி உள்ள 14 கோடி இந்தியர்கள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய சலுகைகளை இழந்து வருகின்றனர்.
எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவில் நடத்துவதற்கு அரசு முக்கியத்துவம் தர வேண்டும். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அனைத்து பயனாளிகளும் பலன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு என்பது சலுகை கிடையாது. அடிப்படை உரிமை. இவ்வாறு சோனியா பேசினார்.