துணை ஜனாதிபதி தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கான போட்டி: சொல்கிறார் இண்டி. கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
துணை ஜனாதிபதி தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கான போட்டி: சொல்கிறார் இண்டி. கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
ADDED : ஆக 23, 2025 01:59 PM

புதுடில்லி; துணை ஜனாதிபதி தேர்தலில் இரு தனிநபர்களுக்கு இடையே அல்லாமல் இரண்டு வெவ்வேறு சித்தாந்தங்களுக்கு இடையே போட்டி வேண்டும் என்று நான் விரும்பினேன் என்று இண்டி கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கூறி உள்ளார்.
செட்பம்பர் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டு விடும். தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் மனுத்தாக்கல் செய்துவிட்டார்.
இண்டி கூட்டணியின் வேட்பாளராக ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட் நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டு உள்ளார். இவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் இருவேட்பாளர்களும் அனைத்துக்கட்சி தலைவர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந் நிலையில் இண்டி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் துணை ஜனாதிபதி தேர்தல் பற்றியும், தமது சித்தாந்தம் என்ன என்பது பற்றியும் அவர் சில கருத்துகளை கூறி உள்ளார்.
அவர் தெரிவித்து உள்ளதாவது;
இது ஒரு போர் அல்ல.. கருத்துகளின் மோதல். இங்கு வாழ்நாள் முழுவதும் ஆர்எஸ்எஸ்சில் முழுநேர உறுப்பினராக இருந்த ஒருவர்(சி.பி. ராதாகிருஷ்ணன்) என்ற பிரசாரம் நடைபெற்று வருகிறது. நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அந்த சித்தாந்தத்துடன் நான் உடன்படவில்லை.
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை. நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தது இல்லை. இது வெவ்வேறு இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே ஒரு நல்ல போட்டியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். தனி நபர்களுக்கு இடையே அல்ல.
இவ்வாறு சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.