கிராம வாழ்க்கையை பார்க்கணுமா? வாங்க ரங்கோலி கார்டனுக்கு!
கிராம வாழ்க்கையை பார்க்கணுமா? வாங்க ரங்கோலி கார்டனுக்கு!
ADDED : ஜன 09, 2025 06:36 AM

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் நகர பகுதியில் வாழும் மக்கள் வேகமாக இயங்கி கொண்டு இருக்கின்றனர். கிராம பகுதிகளில் இருந்து நகரங்களுக்கு வேலைக்காக வந்தவர்கள் கூட, நகர வாழ்க்கையை வாழ ஆரம்பித்து உள்ளனர்.
சிறுவயதில் கிராமங்களில் தாங்கள் கற்றுக்கொண்ட பாரம்பரியம், கலாச்சாரத்தை தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி தர வேண்டும் என்று ஆசை இருந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
நகர பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது பிள்ளைகளுடன் ஆண்டில் ஒருமுறை கூட தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்வதை மறந்துவிட்டனர்.
இதனால், இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு கிராம கலாசாரம், பண்பாடு, வரலாறு பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு குறைவு. இந்த குறையை போக்கும் வகையில் பெங்களூரு நகருக்குள் ஒரு கிராமமே இருக்கிறது. அது என்ன இடம், எப்படி செல்வது என்று பார்க்கலாம்.
பெங்களூரு நகரின் ஜக்கூர் அருகே ராட்சேனஹள்ளி ஸ்ரீராம்புரா பகுதியில் உள்ளது ரங்கோலி கார்டன். கர்நாடக அரசின் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி துறைக்கு உட்பட்ட மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் மற்றும் ரூரல் எனர்ஜி துறையின் கீழ் ரங்கோலி கார்டன் வருகிறது.
இங்கு அமைக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு சிலைகளும் கிராம வாழ்க்கையை அப்படியே தத்ரூபமாக எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.
கிராமத்தில் ஒரு குடும்பம் எப்படி வாழும். விவசாயம் எப்படி நடைபெறும். திருவிழாக்கள் எப்படி நடக்கும்.
சிறுவர்கள் ஒன்று கூடி எப்படி விளையாடுவர். கடைகள் எப்படி இருக்கும். பெரியவர்கள் எப்படி நேரத்தை போக்குவர் என்பது உட்பட கிராமங்களை பற்றிய அழகை தத்ரூபமாக எடுத்துச் சொல்லும் வகையில் பல சிலைகள் உள்ளன.
இங்கு குழந்தைகளை அழைத்து சென்று நான் சிறுவயதில் இப்படி தான் விளையாண்டேன். எங்கள் கிராமம் இப்படி தான் இருக்கும் என்று பெற்றோர் எடுத்து சொல்லும் வகையில் அமைந்துள்ளது.
இங்கு சென்று சிற்பங்களை பார்க்கும் போது குழந்தைகள் மெய்சிலிர்த்து போய்விடுவர். பிள்ளைகளை கிராமத்திற்கு அழைத்து சென்ற அனுபவமும் பெற்றோருக்கு கிடைக்கும்.
ரங்கோலி கார்டன் வருடத்தில் 365 நாட்களும் தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். இது ஒரு அழகான பெரிய தீம் பார்க் என்பதால், சுற்றி பார்ப்பதற்கு ஒரு மணி நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை ஆகலாம்.
மூன்று வயது முதல் 12 வயது வரை பிள்ளைகளுக்கு 100 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை பெரியவர்களுக்கு 150 ரூபாய் கட்டணம்.சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் பெரியவர்களுக்கு 200 ரூபாய் கட்டணம்.
மெஜஸ்டிக்கில் இருந்து நாகவரா, ஜக்கூர், தனிசந்திரா செல்லும் பி.எம்.டி.சி., பஸ்களில் சென்றால் ரங்கோலி கார்டனுக்கு எளிதில் சென்று விடலாம் - -நமது நிருபர் --.

