ADDED : ஏப் 03, 2025 07:11 AM
சம்பல் : உத்தர பிரதேசத்தின் சம்பல் கலவரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட பிரதான குற்றவாளியை, அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி, 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய பல்வேறு மாநில போலீசாரால் தேடப்படும் திலீப் என்ற ஹரீஷை உ.பி., போலீசாரும் தேடி வந்தனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு 25,000 ரூபாய் பரிசு அளிக்கப்படும் எனவும் போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் சம்பல் மாவட்டத்தின் அஸ்மோலி கிராமத்தில் பதுங்கியிருந்த திலீப்பை, போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து சம்பல் மாவட்ட எஸ்.பி., கிருஷ்ண குமார் பிஷ்னோய் கூறியதாவது:
கடந்த, 1993 முதல் கார்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த திலீப், ஹரியானா, உத்தரகண்ட், டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் கைவரிசையை காட்டியுள்ளார். அவ்வாறு கொள்ளையடிக்கும் கார்களை, நாகாலாந்து, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்துள்ளார்.
இதன் காரணமாக, அந்தந்த மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த திலீப், பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய ஷாரிக் சத்தா கும்பலுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதையும் கண்டறிந்துள்ளோம்.
சமீபத்தில், அரங்கேறிய சம்பல் கலவரத்தில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கைதான திலீப்பிடம், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

