ADDED : நவ 10, 2024 05:48 PM

புதுடில்லி: தேடப்படும் குற்றவாளியான காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ் தல்லா என அழைக்கப்படும் அர்ஷ்தீப் சிங், இன்று கனடாவில் கைது செய்யப்பட்டான். இதை இந்திய புலனாய்வு அதிகாரிகள் உறுதி செய்தனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், 2023 ஜூன் 18ல், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாள தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவத்தில், இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கூறி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இதனால் இந்தியா- கனடா உறவுகள் சீர் குலைந்துள்ளன. இந்நிலையில் இந்தியா தேடி வரும் பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங் கனடாவில் கைது செய்யப்பட்டிருப்பது. முக்கியமாக பார்க்கப்படுகிறது.
கைது குறித்து இந்திய புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது:கனடா மில்டன் டவுன் நகரில், கடந்த அக்டோபர் மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் ஆயுத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டிருந்த அர்ஷ் தல்லாவை கனடா போலீசார் கைது செய்தனர்.இந்தியாவில், பல்வேறு பயங்கரவாத குற்றச்செயல்களை நடத்திய பயங்கரவாதி அர்ஷ் தல்லா கனடாவில் மனைவியுடன் தலைமறைவாக இருந்துள்ளான். அவனை அந்நாட்டு சட்ட அமலாக்கத்துறை அமைப்புகள், ஹல்டன் பிராந்திய போலீஸ் பாதுகாப்பு படையினர் ஆகியோர் தேடி வந்தனர்.
நமது அதிகாரிகளும், நுணுக்கமாக தேடுதல் மேற்கொண்டு, கனடா பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல்களை அளித்து உறுதுணையாக இருந்தனர். இதன் பயனாக அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு மூளையாக செயல்பட்டு வந்த தல்லா, காலிஸ்தான் புலி படை பயங்கரவாத அமைப்புக்கு தலைவனாக செயல்பட்டு வந்தான் என்பது தெரியவந்துள்ளது.