விதிகளின்படியே வக்ப் மசோதா நிறைவேற்றப்பட்டது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்
விதிகளின்படியே வக்ப் மசோதா நிறைவேற்றப்பட்டது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்
ADDED : ஏப் 23, 2025 06:27 AM

''இதற்கு முந்தைய காலங்களில் பார்லிமென்ட்டில் எவ்வாறு வக்ப் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டனவோ, அதன்படியே தற்போதும் அரசிலயமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு வக்ப் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது,'' என, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் கூறினார்.
மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அர்ஜுன்ராம் மெஹ்வால் டில்லியில் நேற்று கூறியதாவது; அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளின்படி வக்ப் மசோதா நிறைவேற்றப்படவில்லை என்றும், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு பார்லிமென்டுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்றும், சில தலைவர்கள் பேசி வருகின்றனர்.
அவர்களிடம் நான் கேட்க விரும்புவது இதைத் தான். 1954ல் வக்ப் சட்டத் திருத்த மசோதாவை இதே பார்லிமென்ட் தானே நிறைவேற்றியது. அதன் பின், 1995ல் ஏற்கனவே இருந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதும் பார்லிமென்டில்தானே. தற்போது இந்த சட்ட திருத்த மசோதாவை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார்; அதுதான் இவர்களின் பிரச்னை. இதன் காரணமாகவே, இந்த தலைவர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.
இதுபோன்ற தலைவர்களிடம் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தவறான பிரசாரங்களை மேற்கொள்ளும் இந்த தலைவர்களை, மக்கள் புறக்கணிக்க வேண்டும். இந்த சட்டம் குறித்து மக்களிடம் விளக்கிச் சொல்லும் பணியை நிச்சயம் மேற்கொள்வோம்.
அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய தலைவர் சைபுல்லா ரஹ்மணி, இந்த சட்டம் குறித்து விமர்சித்துள்ளார். 'அரசியலமைப்பு சட்டத்தின்படிதான், நாடு இயங்க வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட கட்சியின் தேர்தல் அறிக்கையின் படி இயங்க கூடாது' என்று அவர் கூறியுள்ளார். மதம் தொடர்பான விஷயங்களில் அரசு தலையிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ்தான் உள்ளன. மதம் தொடர்பான விஷயங்களில் அரசு தலையிடுவதாக கூறுவது தவறு. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள வக்ப் சட்டம், எந்த வகையிலும் மதம் தொடர்பான விஷயங்களில் தலையிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -