வக்பு வாரிய திருத்த மசோதா: விவசாயிகளிடம் பார்லி., கமிட்டி கருத்து கேட்பு
வக்பு வாரிய திருத்த மசோதா: விவசாயிகளிடம் பார்லி., கமிட்டி கருத்து கேட்பு
ADDED : நவ 08, 2024 07:45 AM

பெங்களூரு: கர்நாடகாவுக்கு வருகை தந்த, பார்லிமென்ட் இணை கமிட்டி, பலரின் எதிர்ப்புக்கு இடையிலும், விவசாயிகளிடம் கருத்து சேகரிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வக்பு வாரிய திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து சேகரிக்க, பா.ஜ., - எம்.பி., ஜெகதாம்பா பால் தலைமையில், 'பார்லிமென்ட் இணை கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் இணை கமிட்டி, கர்நாடகா வருவதற்கு, ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்தது. எனவே தலைவர் ஜெகதாம்பிகா பால் மட்டும் வந்துள்ளார்; கமிட்டி உறுப்பினர்கள் வரவில்லை.
ஹூப்பள்ளி மற்றும் விஜயபுராவுக்கு நேற்று அவர் வந்தார். இவ்விரு மாவட்டங்களிலும், சில விவசாயிகளை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்தார்.
ஹூப்பள்ளிக்கு வந்த அவரை, பா.ஜ., - எம்.எல்.ஏ., மகேஷ் வரவேற்றார். எம்.பி., க்கள் தேஜஸ்வி சூர்யா, கோவிந்த் கார்ஜோள், எதிர்கட்சி துணை தலைவர் அரவிந்த் பெல்லத் உட்பட, பல தலைவர்கள், விவசாய சங்கத்தினர், ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் உடன் இருந்தனர். அதன்பின் தனியார் ஹோட்டலில், ஆலோசனை கூட்டம் நடந்தது.
வக்பு சொத்துகள் குறித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டது குறித்து, ஆய்வு செய்ய கோவிந்த் கார்ஜோள் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கை, பார்லிமென்ட் இணை கமிட்டியிடம் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின், விஜயபுராவின் பல்வேறு இடங்களுக்கு சென்று, விவசாயிகளிடம் குறைகள் கேட்டறிந்தார். 'உங்களுக்கு வக்பு வாரியம், பலவந்தமாக நோட்டீஸ் அளித்ததா; உங்களை வெளியேற்ற யாராவது முயற்சிக்கின்றனரா; நில பத்திரம் சரியாக உள்ளதா; உங்கள் நிலத்தில் இருந்து உங்களை வெளியேற்ற முயற்சித்தால், என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்' என, ஜெகதாம்பிகா பால் அறிவுறுத்தினார்.
விஜயபுராவில் இருந்து ஹூப்பள்ளிக்கு வந்த அவரை, மத்திய இணை அமைச்சர் ஷோபா, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் உட்பட பல தலைவர்கள் வரவேற்றனர். இங்கும் விவசாயிகளின் பிரச்னைகள் கேட்டறியப்பட்டது.
அதன்பின் ஜெகதாம்பிகா பால் அளித்த பேட்டி:
வக்பு வாரிய சொத்துகளை அபகரிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மக்களின் பிரச்னைகளை கேட்டறிய இங்கு வந்துள்ளேன். இது தொடர்பாக, விரிவான அறிக்கை தயாரிக்கப்படும்.
கர்நாடக விவசாயிகள், பொது மக்களின் சொத்துகளை அபகரிக்க முயற்சி நடக்கிறது என, எம்.பி., தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். வட மாவட்டங்களின் 50 முதல் 60 ஆண்டுகளாக விவசாயம் செய்யும் நிலம், கோவில்களின் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது.
விஜயபுரா, ஹூப்பள்ளி, பீதர் விவசாயிகள் மக்களின் பிரச்னைகளை கேட்டறிவேன். விவசாயிகள், மடங்கள், கோவில்களின் சொத்து பத்திரத்தை, அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல், வக்பு சொத்துகளாக மாற்ற முடியுமா.
அரசின் உத்தரவுப்படி, விவசாயிகள் பத்திரத்தில் வக்பு சொத்து என, பதிவு செய்யப்படுகிறது. நோட்டீசை திரும்ப பெறுவதாக அரசு கூறியுள்ளது.
தற்போதைக்கு விவசாயிகளை வெளியேற்ற வேண்டாம் என, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டிருக்கலாம். இதனால் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா.
புராதன மடங்கள், கோவில்களின் 15,000 ஏக்கர் நிலம், எப்படி வக்பு சொத்தாக இருக்க முடியும். 1920, 1930லிருந்து விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலம், எப்படி வக்பு சொத்தாகும்.
எந்த ஆவணங்களும் இல்லாமல், வக்பு சொத்து என்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைகின்றனர். இது தொடர்பாக, நாளை (இன்று) புவனேஸ்வர், கோல்கட்டா உட்பட பல்வேறு இடங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளேன். அதன்பின் மத்திய அரசிடம் கமிட்டி அறிக்கை அளிக்கும்.
லோக்சபா சபாநாயகர், பார்லிமென்ட் இணை கமிட்டி அமைத்தார். இதில் பா.ஜ., மட்டுமின்றி, சமாஜ்வாடி, தி.முக., காங்கிரஸ், ஓ.வை.சி., உட்பட பல்வேறு கட்சியினரும் உறுப்பினர்களாக உள்ளனர். பல தரப்பினரும் எங்களிடம் பிரச்னைகளை கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.