வக்பு வாரிய மசோதா: பார்லி கூட்டுக்குழுவிற்கு கால நீட்டிப்பு
வக்பு வாரிய மசோதா: பார்லி கூட்டுக்குழுவிற்கு கால நீட்டிப்பு
UPDATED : நவ 27, 2024 09:22 PM
ADDED : நவ 27, 2024 09:18 PM

புதுடில்லி: வக்பு வாரிய மசோதா குறித்து ஆய்வு செய்யும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவிற்கு கால நீட்டிப்பு கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மனு அளித்து உள்ள நிலையில், அக்குழுவின் தலைவரும், காலநீட்டிப்பு வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பார்லிமென்டின் கடந்த கூட்டத்தொடரில் வக்புவாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, இந்த மசோதா பார்லிமென்ட் கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்குழுவினர் கூடி மசோதா குறித்து ஆய்வு செய்வதுடன், பலரின் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். தற்போது துவங்கிய பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் இம்மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், பார்லி கூட்டுக்குழுவிற்கு கூடுதல் அவகாசம் வேண்டும். இதற்காக குழுவிற்கு கால நீட்டிப்பு அளிக்க வேண்டும் என சபாநாயகரை நேரில் சந்தித்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இந்நிலையில், கூட்டுக்குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பாலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். கூட்டுக்குழுவிற்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக்கூறியுள்ள அவர், இதற்கான தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். பார்லிமென்டிலும், நாளை தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக கூட்டுக்குழு கூட்டத்தை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இக்குழுவின் நடவடிக்கைகள் கேலிக்குரியதாக உள்ளதாக குற்றம்சாட்டி இருந்தன. பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு, அவர்கள் மீண்டும் வந்து குழு நடவடிக்கையில் பங்கேற்றனர்.