ADDED : மே 06, 2025 04:45 AM

புதுடில்லி: வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, அடுத்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வக்ப் திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செல்லாது என அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
போதிய நேரம் இல்லை
இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வரும் 13ம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதியாக, பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:
இந்த வழக்கு தொடர்பாக அமர்வு எழுப்பியுஉள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, பதில் மனுவை தாக்கல் செய்துள்ளோம். ஒவ்வொரு கேள்விக்கும் இதில் பதில் உள்ளது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவே விசாரிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.
ஆனாலும், போதிய நேரம் இல்லாததால், அதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விவாதிக்க வேண்டும்
இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறியதாவது:
ஓய்வு பெறும் நாள் மிக விரைவில் வருகிறது. இந்த வழக்கில், மத்திய அரசு மிகவும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்துஉள்ளது. அதில், பல விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும்.
விரைவாக விசாரித்து எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க போதிய அவகாசம் இல்லை. அதனால், இதற்கு மேலும் நாங்கள் விசாரிப்பதைவிட, அடுத்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிப்பதே உகந்ததாக இருக்கும்.
பதிவு செய்யப்பட்டு உள்ள வக்ப் சொத்துக்கள் எண்ணிக்கை தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள தகவலுக்கும், மனுதாரர்கள் கூறும் தகவல்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. இவ்வாறு இந்த வழக்கில் பல விஷயங்கள் குறித்து விரிவாக விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம்.
அதனால், வழக்கின் விசாரணை, வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.