UPDATED : ஏப் 25, 2025 07:25 AM
ADDED : ஏப் 24, 2025 11:35 PM

மதுபானி: 'பஹல்காம் படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களும் நிச்சயம் தண்டிக்கப்படுவது உறுதி,'' என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் தெரிவித்தார். பொது நிகழ்ச்சியில் வழக்கத்துக்கு மாறாக ஆங்கிலத்தில் உரையாற்றிய மோடி இவ்வாறு தெரிவித்து இருப்பது, உலக நாடுகளுக்கு அவர் அளித்த அவசர செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியா - பாக்., இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில், 26 அப்பாவி சுற்றுலா பயணியரை சுட்டுக்கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே நேற்று உரையாற்றினார்.
தப்ப முடியாது
பீஹாரின் மதுபானியில் நடந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில், அவர் தன் பேச்சை துவங்குவதற்கு முன், தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சில நொடிகள் மவுனமாக நின்றார். அதன்பின் வழக்கம்போல் ஹிந்தியில் பேசத்துவங்கிய பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசத்துவங்கியதும் திடீரென ஆவேசம் அடைந்தவராக, வழக்கத்திற்கு மாறாக ஆங்கிலத்தில் உரையாற்றத் துவங்கினார்.
அவர் பேசியதாவது: இந்த பீஹார் மண்ணில் இருந்து, உலகத்திற்கு இன்று ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். பஹல்காம் படுகொலைகளுக்குக் காரணமான பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவாக உள்ளோரையும் கண்காணித்து, அடையாளம் கண்டு நிச்சயம் தண்டிப்போம். இந்த பூமியின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது. இந்தியாவின் ஆன்மாவை பயங்கரவாதத்தால் சிதைக்க முடியாது. பயங்கரவாதிகளை தண்டிக்காமல் விடமாட்டோம்.
ஆங்கிலத்தில் உரை
நீதி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதில், ஒட்டுமொத்த தேசமும் உறுதியாக உள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை உடைய அனைவரும் எங்களுடன் உள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் எங்களுடன் உறுதுணையாக நின்ற பல்வேறு நாடுகளின் மக்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததை அடுத்து, அவர்களுக்கும் இந்த செய்தி சென்றுசேர வேண்டும் என் நோக்கத்தில்தான், பிரதமர் ஆங்கிலத்தில் உரையாற்றியதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாக்., அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு உணர்த்தும் அவசர செய்தியாகவே இது பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போர் பிரகடனத்தை தான் பிரதமர் இவ்வாறு வெளிப்படுத்தியதாகவும், எந்த நிமிடமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை டில்லியில் நேற்று சந்தித்தனர். அப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக விவரித்தனர்.
இதுதவிர, ஜெர்மனி, ஜப்பான், போலாந்து, பிரிட்டன், ரஷ்யா உட்பட, 20 நாடுகளுக்கான துாதர்களை, நம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் நேற்று சந்தித்து, பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து விவரித்தனர். இதற்கிடையே, பாகிஸ்தானும் பதிலடி நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. இந்திய விமானங்கள், தங்கள் வான்பரப்பிற்குள் பறப்பதற்கு பாக்., அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.