ADDED : மார் 07, 2024 02:04 AM
பெங்களூரு, 'இ - மெயில்' வாயிலாக வந்த வெடிகுண்டு மிரட்டலால், கர்நாடக அம்பாரி சொகுசு பஸ்களில் பயணிக்கும் பயணியருக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
மூன்று நாட்களுக்கு முன், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா ஆகியோருக்கு, மிரட்டல் இ - மெயில் வந்தது.
அதில், '41.5 கோடி பணம் வழங்கவில்லை என்றால், ராமேஸ்வரம் கபே போன்று, மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு நடத்துவோம் என்று, மிரட்டல் விடுத்திருந்தனர்.
குறிப்பாக, 'கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் அம்பாரி உத்சவ் சொகுசு பஸ்சை வெடிக்க செய்து, இன்னொரு டிரெய்லர் காட்டு வோம்' என, மிரட்டி இருந்தனர்.
கர்நாடகாவில், 20 அம்பாரி உத்சவ் சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் பயணித்தால், போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்நிலையில், மக்கள் அதிகம் கூடும் மெஜஸ்டிக், சாந்தி நகர், மைசூரு சாலையின் சேட்டிலைட் பஸ் நிலையங்களில், பயணியரின் பைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் வாயிலாக நேற்று சோதனை நடத்தினர்.
பஸ்களில் சந்தேகப்படும்படியான பைகள் ஏதாவது இருந்தால், உடனடியாக ஓட்டுனர், நடத்துனருக்கு தகவல் கொடுக்கும்படியும், எச்சரிக்கையாக இருக்கும்படியும், பயணியருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., அறிவுறுத்தி உள்ளது.

