விமானங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
விமானங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
ADDED : அக் 17, 2024 01:47 AM

புதுடில்லி கடந்த மூன்று நாட்களில், 'ஏர் இந்தியா, இண்டிகோ' உட்பட பல்வேறு விமான நிறுவனங்களின் 19 விமானங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குற்றவாளிகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்றும், மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
கடந்த 14ம் தேதி, மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு, சமூக வலைதளங்கள் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதேபோல் மத்திய கிழக்கு நாடுகளான ஓமன் தலைநகர் மஸ்கட், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரங்களுக்கு சென்ற விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
அந்த விமானங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவில், வெடிகுண்டுகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் டில்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் உட்பட மற்ற நகரங்களில் இருந்தும் புறப்பட்ட 19 விமானங்களுக்கும், கடந்த மூன்று நாட்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
அடுத்தடுத்து இந்திய விமானங்களை குறிவைத்து சமூக வலைதளங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் அத்துறையின் பார்லிமென்ட் நிலைக்குழு உறுப்பினர்கள், அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.
அப்போது இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய நிலைக்குழு தலைவரும், ஐக்கிய ஜனதா தள எம்.பி.,யுமான சஞ்சய் ஜாவிடம், சிவில் விமான போக்குவரத்துத் துறையின் செயலர் விளக்கம் அளித்தார்.
அப்போது, 'மிரட்டல் விடுத்த நபரின் அடையாளத்தை கண்டறிந்துவிட்டோம். விரைவில் அந்நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளோம்' என, அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நடவடிக்கை
இதற்கிடையே, இரண்டு விமானங்களுக்கு நேற்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டில்லியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆகாசா விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மீண்டும் டில்லிக்கே திருப்பியது.
இதேபோல், மும்பையில் இருந்து டில்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், ஆமதாபாத் நோக்கி திருப்பி விடப்பட்டது.
விமானங்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயணியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.