மோசடி செய்திகளால் ஏமாறாதீர்கள்; அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
மோசடி செய்திகளால் ஏமாறாதீர்கள்; அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
UPDATED : நவ 07, 2024 04:55 AM
ADDED : நவ 07, 2024 01:54 AM

புதுடில்லி, அரசின் ஏதோ ஒரு முக்கிய துறையில் இருந்து தகவல் கேட்பதாகக் கூறி, அரசு அதிகாரிகளை குறிவைத்து சைபர் தாக்குதல் நடக்கும் அபாயம் உள்ளது. அதனால்,அரசு அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் என்.ஐ.எஸ்., எனப்படும் தேசிய தகவலியல் மையம், அனைத்து அமைச்சகங்கள், அரசு துறைகளுக்கு சமீபத்தில் அனுப்பிய சுற்றறிக்கை:
'விஷ்ஷிங்' எனப்படும், மொபைல்போனில் குரல் பதிவு செய்திகளை அனுப்பி மோசடி செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக அரசு அதிகாரிகளுக்கு இதுபோன்ற செய்திகள் அனுப்பப்படுகின்றன.
அதில், ஒரு குறிப்பிட்ட அரசு அமைப்பு அல்லது துறையின் அதிகாரி அனுப்பியதுபோல் காட்டுகின்றனர்.
அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அவர்களுடைய பணி தொடர்பான தகவல்களை மோசடியாளர்கள் கேட்பர். இது உடனடியாக தேவை என்றும், மிகவும் முக்கியமானது, ரகசியமாக வைக்கவும் என்றும்நெருக்கடி கொடுத்து, தகவல்களை கேட்பர்.
இதற்காக அவர்கள், தங்களுடைய மொபைல்போன் எண்களை மறைத்து, அரசு அதிகாரிகளின் எண்ணைப் போல காட்டுவர். காலர் ஐ.டி., எனப்படும் அழைப்பவரின் அடையாளத்தை தெரிந்து கொள்ளும் வசதியை நம்ப வேண்டாம். அதிலும் மோசடி செய்கின்றனர்.
அதனால், இதுபோன்ற செய்திகள் வந்தால், அந்த அழைப்பு உண்மையிலேயே குறிப்பிட்ட அரசு துறையிடம் இருந்து வந்ததா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட மற்றும் தன் வேலை தொடர்பான தகவல்களை பகிர்வதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.