என்னை கண்காணித்தது போதும் சாமி: இசட் பிளஸ் பாதுகாப்பை நிராகரித்தார் சரத்பவார்
என்னை கண்காணித்தது போதும் சாமி: இசட் பிளஸ் பாதுகாப்பை நிராகரித்தார் சரத்பவார்
ADDED : ஆக 31, 2024 11:44 AM

மும்பை: இசட் பிளஸ் பாதுகாப்பு மூலம் தன்னை உளவு பார்ப்பதாக கூறியிருந்த சரத்பவார், பாதுகாப்பை தற்போது நிராகரித்து விட்டார். அவர் கூடுதல் பாதுகாப்பும் வேண்டாம் என தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பிரதான எதிர்க்கட்சி கூட்டணியாக, 'மகா விகாஸ் அகாடி' உள்ளது. இதில், காங்., உத்தவ் தாக்கரேவின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு அங்கம் வகிக்கின்றன.
உளவு பார்ப்பதா?
சரத் பவாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, அவருக்கு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை வழங்கி, சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதமேந்திய 55 வீரர்கள், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் சரத் பவாருக்கு பாதுகாப்பு வழங்கினர். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், நான் யாரை சந்திக்கிறேன்; எங்கு செல்கிறேன் என்பதை அறிய, இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது' என சரத்பவார் குற்றம் சாட்டியிருந்தார்.
நிராகரிப்பு
இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 31) இசட் பிளஸ் பாதுகாப்பை சரத் பவார் நிராகரித்துவிட்டார். டில்லியில் உள்ள தனது வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிப்பது, நகரத்திற்குள் அவர் பயணிக்கப் பயன்படுத்தும் வாகனத்தை மாற்றுவது மற்றும் அவரது காரில் இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை அழைத்துச் செல்வது உள்ளிட்ட வசதிகளையும் நிராகரித்து விட்டார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.